Ad Widget

யாழில் பரபரப்பு : சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற வெளிநாட்டு முதியவர்கள்!!

ஜேர்மனி நாட்டில் இருந்து யாழிற்கு சுற்றுலா விசாவில் வருகை தந்த முதியவர்கள் இருவர் மதுபோதையில் 10 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்த வேளையில், சிறுமி அழுதுகொண்டு வீட்டை விட்டு தப்பியோடி வெளியே வந்த சம்பவம் யாழில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் குளப்பிட்டி பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த முதியவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியைச் சேர்ந்த 10வயது சிறுமி, யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5 இல் கல்வி கற்று வருகின்றார்.

குறித்த சிறுமி மாலை நேர வகுப்பிற்கு குளப்பிட்டி பகுதிக்குச் சென்றுள்ளார்.

வழமை போன்று சிறுமி மாலை நேர வகுப்பினை முடித்துவிட்டு, நேற்றும் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருக்கும் போது, ஜேர்மனி நாட்டில் இருந்து யாழிற்கு சுற்றுலா விசாவில் வருகை தந்திருந்த இருவரும் மதுபோதையில் நின்று சிறுமியை அழைத்துள்ளனர்.

சிறுமி சென்றவுடன், வீட்டிற்குள் கூட்டிச்சென்று சிறுமியை முத்தமிட சென்ற போது சிறுமி அலறி அடித்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே வந்த போது சிறுமிக்கு 70 ரூபா காசு கொடுத்துள்ளனர்.

காசினை வீசிவிட்டு அலறி அடித்துக்கொண்டு நேரடியாக வீட்டிற்கு சென்று தனது தாயாரிடம் நடந்தவற்றினை கூறியுள்ளார்.

தாயார் சிறுமியின் தந்தையாருக்கு சம்பவத்தினை கூறிய போது, சிறுமியின் தந்தையார் சம்பவ இடத்திற்கு வந்து இருவருடனும் பிரச்சினை பட்டதுடன், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சிறுமி நடந்தவற்றினை தாய் மற்றும் தந்தைக்கு கூறியதாக தந்தையார் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற யாழ்ப்பாணம் சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸார் குறித்த இருவரையும் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட ஜேர்மனி நாட்டினைச் சேர்ந்த முதியவர் அல்லைப்பிட்டி பகுதியில் விடுதி ஒன்றினை வைத்திருக்கின்றார் என்றும் வருடா வருடம் இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வருகை தருபவர் என்றும் அயலவர்கள் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

குறித்த ஜேர்மனியை சேர்ந்த நபர் மிகவும் மோசமான நபர் என்றும் அங்கிருந்த அயலினைச் சேர்ந்த பொது மக்கள் பொலிஸாருக்கு மேலும் கூறியுள்ளனர்.

விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், இருவரையும் இன்று செவ்வாய்க்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினையும் மேற்கொண்டு வருகின்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை, கடந்த வருடம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கூட்டு வன்புணர்வு படுகொலை சம்பவத்துடன், சுவிஸ் நாட்டினைச் சேர்ந்த நபர் வித்தியாவின் கூட்டு வன்புணர்வு குறித்த வீடியோ பிரதிகள் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும், இவ்வாறு வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் பாலியல் துஸ்பிரயோகங்களை புரிவதற்கு முனைவதும் அண்மைக்காலமாக நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடதக்கதாகும்.

Related Posts