யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி

கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு யாழில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் படுகொலை நினைவுதினம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், யாழில் அமைந்துள்ள பிரபல ஊடக நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் யாழில் இன்று (செவ்வாய்க்கிழமை) இவ் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

இவ் அஞ்சலி நிகழ்வில் ஊடகவியலாளர்களின் உறவினர்கள் சுடரேற்றியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தியதுடன், பொதுச் சுடரினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் ஏற்றிவைத்தார்.

யாழில் கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக ‘வேட்கை’ எனும் தொனிப்பொருளில் இவ் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந் நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், விந்தன் கனகரத்தினம், அ.பரஞ்சோதி, கே.சிவாஜிலிங்கம், வலி.வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சுகிர்தன் மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் உறவினர்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Related Posts