Ad Widget

யாழில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரிப்பு – வைத்திய நிபுணர் சிவன்சுதன்

யாழ் மாவட்டத்தை உள்ளடக்கிய வடமாகாணத்தில் நீரிழிவு நோயின் தாக்கம் சடுதியாக அதிகரித்து வருகின்றது என யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் சிவன்சுதன் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில் யாழ்.மாவட்டத்தில் உள்ளவர்களே அதிகளவில் இந் நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (11) நண்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்.

தொற்றாத நோயாக நீரிழிவு நோய் காணப்படுகின்ற போதும் உலகளாவிய ரீதியில் இந்நோய் அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகின்றது. உலகளாவிய ரீதியில் 400 மில்லியன் பொது மக்கள் இந்நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இன்னும் 15 ஆண்டுகளில் 600 மில்லியன் மக்கள் இந்நோய் தாக்கத்திற்கு உள்ளாக்கப்படுவார்கள் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இலங்கையினைப் பொறுத்த வரையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 10.3 வீதமானவர்கள் இந் நோய் தாக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இந் நோய் தாக்கம் 2030 ஆம் ஆண்டில் 13.5 வீதத்தினை எட்டும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஆனாலும் வடமாகாணத்தில் அதிகளவு சனத்தொகையினை கொண்டுள்ள யாழ். மாவட்டத்தினைப் பொறுத்த வரையில் தற்போது 16.4 வீதமானவர்கள் நீரிழிவு நோய் தாக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் ஒப்பீட்டளவில் பார்த்தால் யாழ். மாவட்டத்தினை உள்ளடக்கிய வடக்கில் இந்நோய் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது.

நோயினை இனங்காணாமலும் பலர் உள்ளனர். குறிப்பாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருகை தரும் வெளிநோயாளர்கள், கண், சிறுநீரகம், இருதய நோயாளர்கள், சத்திர சிகிச்சைக்கு உள்ளாக்கப்படுபவர்கள் மற்றும் மாதாந்த சிகிச்சைக்காக வருபவர்களுக்கும் நீரிழிவு நோய் தாக்கம் உள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

வடக்கில் உள்ள இளம் சமூகத்தினர் யுத்தம் காரணமாக உயிரிழந்தும், வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்தும் சென்றுள்ளமையால் வயதானவர்களே இந் நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மா, சீனி, உப்பு போன்றவற்றினை அதிகம் தமது உணவுகள் மூலமாக எடுத்துக் கொள்பவர்களையே இந்நோய் அதிகளவில் தாக்குகின்றது.

இந்நிலையில் வடபகுதியில் உள்ளவர்களின் உணவு பழக்க வழக்கங்களில் இவ்வாறான பொருட்கள் அதிகளவில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந் நோய் அதிகரிப்பிற்கு எமது உணவு பழக்க வழங்கங்களும் முக்கிய காரணமாக உள்ளது. மேலும் எமது வாழ்க்கை முறையில் தற்போது பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக துவிச்சக்கர வண்டிகளில் பயணித்த நாங்கள், தற்போது கார், மோட்டார் சைக்கிள், போன்றவற்றில் சுலபமாக பயணிக்கின்றோம்.

சற்று தூரம் செல்வதாக இருந்தாலும் வாகனங்களிலேயே செல்கின்றோம். நடந்து செல்வதையே எம்மில் சிலர் மறந்து விட்டார்கள். இதனால் உடல் பயிற்சிகள் இல்லாமல் நோய்கள் எம்மை இலகுவில் தாக்குவதற்கு ஏதுவான சூழலை நாங்களாகவே ஏற்படுத்திக் கொள்ளுகின்றோம். வருடத்தில் ஒரு தடவையாவது எமது உடலை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்வது நன்மை தரும் என்றார்.

Related Posts