யாழ்.நகரில் காணப்படும் பாரிய குப்பைக்கூழங்கள் சுத்தப்படுத்தப்படாமல் தேங்கிக் கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
தமக்கான நிரந்தர நியமனம் வழங்குமாறு வலியுறுத்தி யாழ்.மாநகர சபையின் சுகாதார ஊழியர்கள் கடந்த எட்டு நாட்களாக முன்னெடுத்து வரும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட பாடசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களில் குப்பைகள் தேங்கிக் கிடப்பதோடு, அவற்றை மிருகங்கள் இழுத்து வீதியில் போடுவதால் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் குப்பைகள் அழுகி வீதிக்கு வருவதாக குறிப்பிடும் மக்கள் இதுகுறித்து உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதார தொண்டு ஊழியர்களின் நிரந்தர நியமனம் குறித்து கடந்த வாரம் வடக்கு முதலமைச்சர் தலைமையில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தபோதும், எவ்வித முடிவுகளும் எட்டப்படாத நிலையில் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.