யாழில் தொடரும் வாள்வெட்டுக்குழுவின் அட்டகாசம்: பீதியில் மக்கள்

யாழ்ப்பாணம் கோண்டாவில் ஞானவீர சனசமூக நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பலசரக்கு கடை மீது வாள்வெட்டுக் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள், நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இத்தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படாதபோதும், கடைக்கு பாரிய சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. கடையிலுள்ள பொருட்களை கொத்தி நாசமாக்கி, சேதப்படுத்திச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அத்தோடு, அப்பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதேவேளை, யாழில் அதிகரிக்கும் வாள்வெட்டு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்த அண்மைய நாட்களாக சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறிப்பாக கொக்குவில், கோண்டாவில் பகுதிகளை சூழவுள்ள பகுதிகளில் விசேட பொலிஸ் அணியினர் சுமார் 150 பேர் களமிறக்கப்பட்டு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் சந்தேகநபர்கள் 21 பேரின் வீடுகளை சோதனையிட்டனர். இதன்போது மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

சுற்றிவளைப்பு இடம்பெற்ற பகுதியில், அதுவும் பொலிஸார் அங்கிருந்து சென்ற சில மணி நேரத்திலேயே மேற்குறித்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts