திருமணம் மற்றும் விசேட நிகழ்வுகள் நடைபெறும் மாதமாக ஓகஸ்ட் மாதம் இருப்பதால் யாழ்ப்பாணத்தில் திருமண மண்டபங்களுக்கு பெரும் தட்டுப்பாடடு நிலவுகின்றது.
வீடுகளில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகள் நடைபெறும் வழக்கம் மாறி, மண்டபங்களில் நடத்தும் கலாசாரம் யாழ்ப்பாணத்தில் தற்போது பரவலாக பரவி வருகின்றது.
திருமண மண்டபங்கள் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளதுடன், ஆலயங்களிலும் திருமண மண்டபங்கள் அமைக்கப்படுகின்றன. இதனைவிட யாழ்ப்பாணத்திலுள்ள ஹோட்டல்கள் சிலவற்றிலும் திருமண மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருமண மண்டபம் ஒன்று 20 ஆயிரம் ரூபாய் தொடக்கம் 45 ஆயிரம் ரூபாய் வரையில் வாடகைக்கு விடப்படுகின்றன. இதனைவிட அலங்கரிப்புச் செலவு, உணவு என்பன தனியாக அறவிடப்படும்.
தற்போது, அதிகளவான திருமணங்கள் நடைபெறுகின்றமையால் யாழ்ப்பாணத்தில் திருமண மண்டபங்களை பெறுவது மிகவும் சிரமமாகவுள்ளது. திருமண மண்டபங்களுக்கு ஒரிரு மாதங்களுக்கு முன்னரே முற்பதிவும் செய்யப்பட்டுள்ளன.