Ad Widget

யாழில் டெங்கு நோய் தாக்கத்தால் பாடசாலை மாணவி உட்பட இருவர் பலி

இலங்கையின் தென்னிலங்கையை ஆட்டிப்படைத்த பாரிய உயிர்க்கொல்லி நோயான டெங்கு, தற்போது வடக்கு மாகாணத்திலும் தீவிரமாக பரவியுள்ளது. டெங்கு நோய் தாக்கத்தால், யாழ்ப்பாணத்தில் தாயொருவரும் பாடசாலை மாணவி ஒருவரும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

யாழ். பொஸ்கோ பாடசாலையில் கல்வி கற்று வந்த கணேசமூர்த்தி சாரா (வயது-9) என்ற மாணவி, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாலை உயிரிழந்துள்ளார்.

அத்தோடு, இணுவில் கிழக்கைச் சேர்ந்த மல்லிகாதேவி (வயது – 49) என்ற தாய், நேற்று முன்தினம் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இவர்கள் இருவரதும் சடலங்கள், உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

குறித்த இருவருக்கும் காய்ச்சல் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில, தனியார் மருத்துவமனைகளில் மருந்து மாத்திரைகளை வாங்கி உட்கொண்டுள்ளதோடு, காய்ச்சல் தீவிரமடைந்ததன் பின்னரே யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

காய்ச்சல் ஏற்படும் போது சாதாரண மருந்து வில்லைகளை உட்கொள்ள வேண்டாம் என்றும் மருத்துவரை நாடி உடன் இரத்தப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் சுகாதார அமைச்சு ஏற்னவே அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் தற்போது வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts