கிராம மட்ட சிறுவர் பாதுகாப்புக்குழு அங்கத்தவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நேற்று முன்தினம்(22) யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட செயலக அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது.
தேசிய நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக யாழ் மாவட்ட செயலக சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெறும் இச்செயலமர்வில் சிறுவர் பாதுகாப்புக்குழு அங்கத்தவர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் தலைமையுரையாற்றிய யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், அலுவலர்கள் சிறுவர்கள் தொடர்பில் சரியான தரவுகளை நேரில் சென்று அறிந்து வைத்திருத்தல் வேண்டும். துல்லியமான தகவல்கள் இருப்பின் மாத்திரமே சரியான திட்டமிடலுடன் அபிவிருத்திகளை செய்ய முடியும். சிறுவர் பாதுகாப்பென்பது சமூக பொறுப்பாகும். சிறுவர்களின் கல்வியை மேம்படுத்தல், பாடசாலை இடைவிலகிய மாணவர்களை மறுபடியும் பாடசாலை செல்ல வழிவகுத்தல் போன்ற செயற்பாடுகளை செய்ய உத்தியோகத்தர்கள் முன்வர வேண்டும்.முன்னைய காலம் போல அல்லாது தற்போது மக்களுடைய தேவைகளை அறிந்து உத்தியோகத்தர்கள் செயற்பட வேண்டும்.பொது மக்களுக்கு செய்யும் பணி கடவுளுக்கு செய்யும் தொண்டு போல புனிதமானது.
மேலும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகள் இடம்பெறுமெனில் அதனை சரியான இடத்திற்கு இரகசியமான முறையில் அறியத்தரப்படுமாயின் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்கெனவே யாழ் மாவட்ட செயலகத்தில் 0212225000 என்ற தொலைபேசி இலக்கம் இயங்குகின்றது. இவ்வருடம் மட்டும் அலுவலக நேரங்களிலும் அடுத்த வருடம் முதல் 24 மணித்தியாலமும் புகார்களை பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இயங்கக்கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
நிகழ்வின் வளவாளர்களாக திட்ட ஆலோசகர் திரு.இ.சர்வானந்தன் மற்றும் சாந்திகம் நிலைய திட்ட அலுவலர் திரு.எஸ்.முகுந்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.