Ad Widget

யாழில் சிறுவர்கள் மத்தியில் தொழுநோய் தொற்று அதிகரிப்பு!!

யாழ். மாவட்டத்தில் கடந்த காலங்களை விட இந்த வருடம் சிறுவர்கள் மத்தியில் தொழுநோய்த் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றுநோய்ப் பிரிவு எச்சரித்துள்ளது.

யாழ்.மாவட்டத்தில் கடந்த 5 வருடங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் தொழு நோய்த் தொற்று அதிகரித்து காணப்படுகின்றது.

அதிலும் 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களே அதிகமாக இந்த நோய்த்தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

தொழுநோயானது காற்றினால் பரவும் நோயாக இருப்பதால் சன நெருக்கடி உள்ள பிரதேசங்களிலும் காற்றோட்டம் இல்லாத பகுதிகளிலும் அதிகமாகத் தொற்றுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

அந்த வகையில் யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளிலும் இந்த நோயின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது.

ஏனைய பகுதிகளை விட சங்கானை பகுதியில் இந்த நோயின் தாக்கம் அதிகமாகக் காணப்படுவதாக இனங் காணப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் கடந்த வருடம் 58 பேர் தொழுநோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை இனம் காணப்பட்ட போதிலும் இந்த வருடம் ஒக் டோபர் மாதம் வரை இந்த நோய்த்தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக 45 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் தொழுநோய்க்குரிய இலவச சிகிச்சை யாழ். போதனா வைத்தியசாலையில் நடைபெற்று வருகின்றது.
இங்கு 65 பேர் வரையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநோயானது தோல் மற்றும் நரம்புகளை அதிகமாக பாதிக்கின்ற நோயாக இருப்பதால் இந்த நோயின் முக்கிய அறிகுறியாக உடலில் உணர்ச்சியற்ற வெள்ளைத் தழும்புகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியரை நாட வேண்டும் என சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சன நெருக்கம் இல்லாத பகுதிகள் மற்றும் காற்றோட்டம் உள்ள பகுதிகளில் கூடியளவு இருப்பதற்கு முயற்சி செய்வதுடன் இந்த நோயின் தாக்கம் கண்டு பிடிக்கப்பட்டால் தொடர்ச்சியாக 6 மாதம் சிகிச்சை பெறுவது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts