Ad Widget

யாழில் சிறுமிக்கு கை அகற்றப்பட்ட சம்பவம்: நீதி கோரும் ஆசிரியர் சங்கம்

யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை மாணவியின் கை அகற்றப்பட்டமைக்கு நீதி விசாரணை வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்ட செய்தி குறிப்பில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த செய்தி குறிப்பில்,

யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் சகல துறையிலும் ஆர்வமுள்ள மாணவியின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் முறையான நீதி விசாரணை நடாத்தப்பட வேண்டும்.

கல்வியிலும், இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் மிகுந்த ஆர்வமும் திறமையுமுள்ள குழந்தை மாணவிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது திட்டமிட்ட செயல் அல்லாவிட்டாலும் மருத்துவத்துறைக்கு இழுக்கான விடயமாகும். இதனை சர்வசாதாரணமாக விட்டுவிட முடியாது.

ஆகையால் குழந்தை நித்தம் பயன்படுத்துகின்ற தனக்கு வளமான கை அகற்றப்பட்டமை அக்குழந்தையின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இதற்கு மாற்றுவழி என்ன? என்பதனை எவருமே தேடமுடியாத அளவுக்கு துயரம் நடைபெற்றுள்ளது.

இது போன்ற தவறுகள் இனியும் நடைபெறக்கூடாது என்பதற்காக முறையான நீதி விசாரணை நடாத்தப்பட்டு தவறுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts