Ad Widget

யாழில் சர்வதேச வர்த்தக கண்காட்சி

exbiton-jaffna-JITFசர்வதேச வர்த்தக கண்காட்சி எதிர்வரும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். துரையப்பா மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளதாக யாழ். வர்த்தக தொழில்துறை மன்றத்தில் இன்று காலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது வர்த்தகக்கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு, வடமாகாண முதலமைச்சர் அலுவலகம், கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு, யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றம், இந்திய துணைத்தூதரகம், யாழ்.மாநகர சபை, இலங்கை கண்காட்சி பணியகம் இணைந்து இக்கண்காட்சியினை ஏற்பாடு செய்துள்ளனர்.

இக்கண்காட்சியில் 150 நிறுவனங்களை சார்ந்த 250 காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் வடபகுதி உற்பத்தியாளர்கள் 30ற்கும் மேற்பட்டோர் இணைக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் இதன்போது தெரிவித்தனர்.

எதிர்வரும் 17,18,19 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இந்த யாழ்.சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

கடந்த வருடம் நடைபெற்ற யாழ்.சர்வதேச வர்த்தக கண்காட்சியினை 75 ஆயிரம் மக்கள் பார்வையிட்டுள்ளனர். அந்த வகையில், இந்த வருடம் 80 ஆயிரத்திற்கு அதிகமான மக்களை எதிர்பார்ப்பதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்த கண்காட்சியின் ஊடாக வடபகுதி உற்பத்தியாளர்களுக்கு சர்வதேச சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

அதேவேளை, இந்த சர்வதேச வர்த்தக கண்காட்சியினைப் பார்வையிடுவதற்கு பாடசாலை மாணவர்களுக்கு இலவச அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் ஒத்துழைப்பினையும் ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts