Ad Widget

யாழில் சனத்தொகை பாரியளவில் வீழ்ச்சி: இமெல்டா சுகுமார்

யாழ் மாவட்டத்தில் 10 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழவேண்டிய இடத்தில், இன்று சுமார் 1 இலட்சத்து 8 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 6 இலட்சத்து 15 ஆயிரம் மக்களே வாழ்ந்து வருவதாக யாழ். மாவட்ட செயலாளர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(18.12.2011) நடைபெற்ற ஆறுமுக நாவலரின் 132ஆவது குரு பூஜைத்தின விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

30 வருட கால யுத்தம் முடிவடைந்தும் இன்று மக்கள் மிகவும் அசௌகரியமான நிலையில் விரக்தியோடு இருக்கின்றார்கள். இதுவரை காலமும் பாரிய உயிரிழப்புக்கள், பொருள் இழப்புக்கள் என்பவற்றைச் சந்தித்தும் குடும்பங்கள் பிரிவுபட்ட நிலையில், வாழ வேண்டும் என்ற சிந்தனையுடன் இவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

எமது யாழ். மாவட்டம் போரிற்கு பின்னரான தற்போதைய காலத்தில் கலாச்சார விடயங்களில் கீழ் நோக்கி போய்க் கொண்டிருக்கின்றது என விமர்சிக்காமல், இத்தகைய விமர்சனங்களை செய்வோர் யுத்த காலத்தினை அடுத்து வாழ்வாதாரமற்று வாழும் 50,000 மேற்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்க முன் வர வேண்டும் என இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும், போர் காலத்தை அடுத்து எந்த ஒரு நாட்டிலும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையே எமது மக்களும் எதிர்நோக்குகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts