கோப்பாய்- பூதர்மடம், நீர்வேலி- கரந்தாய் பகுதிகளில் ஒரே இரவில் 7 வீடுகள் உடைத்து பெருமளவு நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது .
கோப்பாய்- பூதர்மடம், நீர்வேலி- கரந்தாய் பகுதிகளில் இன்றைய தினம் அதிகாலை 1 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதிகாலை வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களில் வந்த கொள்ளையர்கள் முதலில் இந்து குரு ஒருவருடைய வீட்டுக்குள் புகுந்து இந்துமத குருவை தாக்கி காயப்படுத்தி விட்டு வீட்டுக்குள் இருந்த பொருட்கள் நகைகளை கொள்ளையிட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக நீர்வேலி -கரந்தாய் பகுதியிலும் அதே கொள்ளையர் குழு 6 வீடுகளை உடைத்து உட்புகுந்து கொள்ளையிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,
முகங்களை மறைத்துக் கொண்டு கம்பிகள், கைக் கோடரிகள், வாள் போன்றவற்றுடன் கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்தார்கள்.வீட்டுக்குள் நுழைந்ததும் சத்தம்போட கூடாது என அச்சுறுத்தி, வீட்டில் இருந்தவர்களை தாக்கி பொருட்கள், நகைகளை கொள்ளையிட்டார்கள்
நாங்கள் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் கொடுத்த போதும் அவர்கள் அதிகாலை 3 மணிக்கே சம்பவ இடத்திற்கு வந்தார்கள், அதற்குள் கொள்ளையர்கள் தப்பிச் சென்று விட்டார்கள் என தெரிவித்துள்ளனர்.
குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.