Ad Widget

யாழில் கொலை செய்த குற்றத்துக்காக இருவருக்கு தூக்குத் தண்டனை!!

யாழ்ப்பாணம் காரைநகரில் குடும்பத்தலைவர் ஒருவரைக் கொலை செய்த குற்றத்துக்கு இருவருக்கு தூக்குத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பளித்தார்.

2008ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி காரைநகர் பாலாவோடையில் முருகேசு கணேசன் கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்யப்பட்டார்.

உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு கொலையில் முடிந்தது.

அவரது கொலையடுத்து வைத்தியலிங்கம் கோவிந்தராசன், வைத்தியலிங்கம் துஷ்யந்தன், முருகேசு சந்திரன், ஆறுமுகம் சின்னத்துரை மனோரஞ்சன், கணபதி முருகேசு, குமாரசாமி மல்லிகா, முருகேசு கட்டச்சி, சந்திரன் யோகேஸ்வரி, சின்னத்துரை புவனேஸ்வரி ஆகிய 9 பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் ஒன்பது பேரும் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் அவர்கள் 9 பேரும் பிணையில் விடுவிகப்பட்டனர்.

இந்த நிலையில் சம்பவம் இடம்பெற்று 10 ஆண்டுகளின் பின்னர் 2018ஆம் ஆண்டு 9 எதிரிகளுக்கும் எதிரான குற்றப்பத்திரிகை சட்ட மா அதிபரால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விளக்கம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இடம்பெற்றது. வழக்குத் தொடுனர் தரப்பு சாட்சியங்கள், எதிரிகள் தரப்பு சாட்சியங்கள் நிறைவடைந்து இரு தரப்பு சமர்ப்பணங்களும் முன்வைக்கப்பட்டன.

வழக்கு தீர்ப்புக்காக இன்றைய தினம் நியமிக்கப்பட்டிருந்தது.

“இந்த வழக்கின் எதிரிகள் 9 பேருக்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முருகேசு கணேசனுக்கு கடுங்காயம் விளைவிப்பதனை பொதுநோக்காகக் கொண்டு சட்டவிரோத கூட்டம் கூடியமை மற்றும் அதன்மூலம் கணேசனுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தியமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளிலிருந்தும் அனைவரும் விடுவிக்கப்படுகின்றனர்.

வழக்குத் தொடுனர் தரப்பால் முன்வைக்கப்பட்ட சாட்சிகளின் அடிப்படையில் எதிரிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட முருகேசு கணேசனுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தியமைக்காக இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 32 உடன் சேர்த்து வாசிக்கப்படும் 296ஆம் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய தவறிழைத்தமை குற்றச்சாட்டில் இரண்டாம் எதிரி வைத்தியலிங்கம் துஷ்யந்தன், மூன்றாம் எதிரி முருகேசு சந்திரன் ஆகிய இருவரும் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு இருவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது.

ஏனைய 9 எதிரிகளும் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து விடுதலை செய்யப்படுகின்றனர் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பளித்தார்.

வழக்குத் தொடுனர் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் வழக்கை நேறிப்படுத்தினார், எதிரிகள் சார்பில் சர்மினி விக்னேஸ்வரனும் முன்னிலையானார்.

Related Posts