யாழில் குற்றச்செயல்களை தடுக்க பொலிஸ் காவலரண்கள்!

யாழ்ப்பாணம் கல்லுண்டாய், பொன்னாலை சந்தி, மற்றும் வல்லிபுர சந்தி ஆகிய இடங்களில் பொலிஸ் காவலரண்கள் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றுகாலை இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர சபை மற்றும் மானிப்பாய் பிரதேச சபை ஆகியன கல்லுண்டாய் வெளிகளில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதிகளில் குப்பைகளை கொட்ட வேண்டாம் என நீதிமன்றத்தால் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது தனியார் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் அப் பகுதி வீதிகளில் குப்பைகளை பைகளில் கட்டி வந்து வீசி செல்வதுடன் மிருகங்களில் உடற்பாகங்களையும் வீசி செல்கின்றனர்.இதனால் அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடுகள் இடம்பெறுகின்றன.

எனவே அப்பகுதியில் நிரந்த பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டால் குப்பைகளை வீசி செல்வதனை தடை செய்ய முடியும் என்ற கோரிக்கை முன்வைக்கபட்டது.

அப்பகுதியில் நிரந்த பொலிஸ் காவலரண் அமைக்க முடியாது எனவும் பொலிசார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்போம் எனவும் மானிப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

பொலிசாரின் ரோந்து நடவடிக்கை மூலம் குப்பைகளை வீசி செல்பவர்களை கைது செய்ய முடியாது என யாழ்.மாநகர சபை ஆணையாளரின் சார்பில் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதி தெரிவித்தார்.

அதனையடுத்து யாழ்.மாநகர சபை ஆணையாளரால் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கடிதம் மூலம் கல்லுண்டாய் வெளியில் பொலிஸ் காவலரண் அமைக்கப்பட வேண்டும் என கோரி கடிதம் அனுப்புமாறு பொலிசார் தெரிவித்தனர்.

அதேவேளை காரைநகர் பொன்னாலை சந்தியிலும் பொலிஸ் காவலரண் அமைக்கப்படவேண்டும் என காரைநகர் பிரதேச செயலாளரால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

பொன்னாலை சந்தியில் ஒரு பொலிஸ் காவலரண் உள்ளது அதில் பகல் வேலைளைகளிலையே பொலிசார் கடமையில் இருக்கின்றார்கள். இரவு வேளைகளில் அக் காவலரணில் பொலிசார் கடமையில் இருப்பது இல்லை.
இதனால் இரவு வேளைகளில் காரைநகரில் இருந்து சட்டவிரோதமான கடத்தல்கள் இடம்பெறுகின்றது. அதனை தடுப்பதற்கு பொன்னாலை சந்தியில் இரவு பகல் பொலிசார் கடமையில் இருக்க வேண்டும் என காரைநகர் பிரதேச செயலாளர் கோரினார்.

மேலும், பருத்தித்துறை வல்லிபுரம் மற்றும் மணல்காடு பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் சவுக்கு மரங்கள் வெட்டப்பட்டு கடத்தபடுகின்றன. அதனை தடுப்பதற்கு வல்லிபுர சந்தியில் நிரந்தர பொலிஸ் காவலரண் அமைக்கப்பட வேண்டும் என பருத்தித்துறை பிரதேச செயலாளர் கோரிக்கை விடுத்திருந்தார்.

Related Posts