Ad Widget

யாழில் குடிநீர் மாசு; கொழும்பிலிருந்தே நீரைக் கொண்டுசெல்கிறேன்

யாழ்.குடா நாட்டு நீர் மாசடைந்திருப்பதால் தனக்குத் தேவையான குடிநீரை கொழும்பிலிருந்தே கொண்டுசெல்வதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

குடா நாட்டில் சீரற்ற கழிவகற்றல் கட்டமைப்பு இன்மையினால் குடிநீர் மாசடைந்திருப்பதாக தெரிவித்த அவர், இதனால் சிறுநீரக நோய் ஏற்படும் அபாயமும் இருப்பதாகக் கூறினார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே வடமாகாண ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

யுத்தத்தினால் தமிழ் மக்களைப் போன்று அவலங்களை அனுபவித்தவர்கள் வேறு எவரும் இல்லை. இன்னுமொரு யுத்தத்தை அவர்கள் ஒருபோதும் கோருவதில்லை. இதுவே உண்மையான நிலை.

உலகத்தில் தீர்க்கதரிசிகள் இருக்கின்றார்கள். இயேசு கிறிஸ்து, புத்தர் ஆகியோரது வரவு பற்றி பேசியவர்களைப் போன்று, உலக அழிவு குறித்து தீர்க்கதரிசனம் உரைப்பவர்கள் உள்ளனர்.

அதேபோன்றுதான் அரசியலில் எதிர்கால ஏற்படும் சம்பவங்கள் குறித்தும் கருத்துரைக்கும் தீர்க்கதரிசிகளும் உள்ளனர். பரபரப்பு அரசியல் தொடர்பில் கருத்து வெளியிட்டு பயத்தை ஏற்படுத்துவதன் மூலம் இவ்வாறானவர்கள் தங்களுக்கு தேவையான குழுக்களை ஏற்படுத்திக்கொள்வார்கள்.

இவர்கள் மக்களிடையே குழப்பத்தைத் தோற்றுவித்து அரசியல் இலாபத்தை பெற முயற்சிப்பார்கள். ஆனால் உண்மையாகவே தமிழ் மக்கள் மிகுந்த கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பொருளாராத ரீதியில் மட்டுமல்ல, அவர்கள் சீரற்ற காலநிலை, குடிநீர்ப் பிரச்சினை ஆகிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகிறார்கள்.

நான் வடமாகாண ஆளுநராக இருந்தும், கொழும்பிலிருந்தே யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டுசெல்கின்றேன். அங்குள்ள நீரைப் பருகினால் சிறுநீரக நோய் ஏற்படும். ஏனென்றால் யாழ்.குடா நாட்டு குடிநீர் மாசடைந்திருக்கிறது.

அதுமட்டுமன்றி குடாநாட்டில் மலசல,கழிவு விநியோகங்கள் சீராக இல்லை. அதனாலேயே அங்கு குடிநீர் மாசடைந்துள்ளது.

எனவே அவர்களுக்கு செய்ய வேண்டியவற்றை மிகவிரைவில் அதிகபட்சமாக மேற்கொள்ள வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் – என்றார்.

Related Posts