Ad Widget

யாழில் கிராம சேவையாளரிடம் மீண்டுமொரு ஈஸி காஸ் மோசடி முயற்சி!!

யாழில் கிராம சேவையாளரிடம் மீண்டுமொரு ஈஸி காஸ் மோசடி மேற்கொள்ள முயற்சித்த போதிலும் குறித்த கிராம சேவையாளர் சுதாகரித்துக் கொண்டதால், மோசடி கும்பலிடம் ஏமாறாது தப்பிக்கொண்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,

யாழ்.அச்சுவேலி பகுதியை சேர்ந்த கிராம சேவையாளர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட நபர் ஒருவர் தன்னை புலனாய்வு பிரிவின் காவற்துறைப் பரிசோதகர் என அறிமுகப்படுத்திக்கொண்டு, ” அச்சுவேலியை சேர்ந்த நபர் ஒருவர் கொழும்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளோம். அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் அச்சுவேலியில் உள்ள அவரது வீட்டில் சோதனைகளை முன்னெடுக்க வந்துள்ளோம். குறித்த வீடு உங்கள் கிராம சேவையாளர் பிரிவில் தான் உள்ளது. எமக்கு தற்போது அவசரமாக 5 ஆயிரம் ரூபாய் பணம் தேவைப்படுகின்றது எனவே அருகில் உள்ள தொலைத்தொடர்பு நிலையத்திற்கு சென்று பணத்தினை ஈஸி காஸ் மூலம் அனுப்புமாறு கோரியுள்ளார்.

குறித்த தொலைபேசி அழைப்பு தொடர்பில் சுதாகரித்த கிராம சேவையாளர் அவர்களின் கதையை கேட்கும் எண்ணத்துடன் அருகில் இருந்த தொலைத் தொடர்பு நிலையத்திற்கு சென்று தனது தொலைபேசியில் உரையாடல்களை பதிவு செய்வதற்கான வழிமுறைகளை மேற்கொண்டவாறு மோசடி கும்பலுக்கு அழைப்பை எடுத்து தான் தொலைத்தொடர்பு நிலையத்திற்கு வந்து விட்டேன் என கூறியுள்ளார்.

அதனை அடுத்து குறித்த நபர்கள் தமது காவற்துறை உத்தியோகஸ்தர் அந்த கடைக்கு பணத்துடன் வந்து கொண்டு இருக்கின்றார். எனவே நீங்கள் 5 ஆயிரம் ரூபாயை இந்த இலக்கத்திற்கு போடுங்கள் அவர் உங்களுக்கு பணத்தினை வந்து தருவார் என கூறியுள்ளார்.

அதற்கு கிராம சேவையாளர் தன்னிடம் பணம் இல்லை. என கூறிய போது , கடையில் உள்ளவரிடம் தொலைபேசியை கொடுக்குமாறு கூறி கடையில் நிற்கும் நபரிடம் காவற்துறை உத்தியோகஸ்தர் பணத்துடன் வருகின்றார். நீங்கள் பணத்தை போடுங்கள் அவர் பணம் தருவார் என கூறியுள்ளார். அதற்கு கடையில் நின்றவரும் முதலாளி வெளியே போயுள்ளார். என்னிடம் பணம் இல்லை. காவற்துறை உத்தியோகஸ்தர் பணம் தந்ததும் உடனே போட்டு விடுறேன் என கூறினார்.

அதற்கு போதைப்பொருளை கைப்பற்ற வந்துள்ள எங்களுக்கு உதவவில்லை எனில் உங்களையும் கைது செய்வோம் என மிரட்டியுள்ளார். அதற்கு கடையில் உள்ள நபர் தன்னிடம் பணம் இல்லை என கூறிய போதும் உங்களை கைது செய்ய வேண்டி வரும் என மிரட்டியுள்ளார்.

அவர்களின் மிரட்டல்களை அடுத்து உஷார் அடைந்த கிராம சேவையாளர் யாழில் இவ்வாறான மோசடிகள் தொடர்பில் நாங்கள் அறிந்துள்ளோம் என கூறியதும் அவர்கள் அழைப்பை துண்டித்துள்ளார்கள்.

யாழில் அண்மை காலமாக ஈஸி காஸ் மூலமான பண மோசடிகள் அதிகரித்து காணப்படுகின்றன. கடந்த சனிக்கிழமை நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம சேவையாளர்கள் மூவரிடம் 50 ஆயிரம் ரூபாய் வரையில் மோசடி செய்திருந்தனர். அதேவேளை காவற்துறை உத்தியோகஸ்தர் ஒருவரிடமும் மோசடி செய்யப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts