Ad Widget

யாழில் காணப்படும் வீதி ஒழுங்கு பிரச்சினைகளே விபத்துக்களுக்கு காரணம்: வருண ஜயசுந்தர

யாழ்ப்பாணத்தில் அண்மைய காலமாக விபத்துக்கள் அதிகரித்துச் செல்வதற்கு, முறையற்ற வீதி ஒழுங்குகளே காரணமென யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் பிரதான வீதிகளில் 15 இடங்களில் வீதி ஒழுங்குப் பிரச்சினைகள் உள்ளதாகவும், அவை உரிய அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

யாழிலுள்ள தனது அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து கருத்துத் தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்-

”யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து நெரிசல்கள், விபத்துக்களை கட்டுப்படுத்துவது குறித்து நாம் கலந்துரையாடியுள்ளோம். முக்கிய வீதிகளில் உள்ள குறைபாடுகளை ஒளிப்படங்களின் ஆதாரத்துடன் நாம் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.

யாழ்.நகரின் பிரதான வீதிகளில் வீதிக் கோடுகள் உரிய முறையில் வரையப்படவில்லை. அதிலும் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் உள்ள பாதசாரி கடவை ஆபத்தினை ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ளது. மண்டபத்தின் வாசலுக்கு நேரெதிரே காணப்படுகின்றது. இதனால் மண்டபத்திலிருந்து வீதிக்கு வரும் சிறுவர்கள், பெரியவர்கள் திடீரென கடப்பதால் விபத்துக்கள் ஏற்படுகின்றது. எனவே அந்த கடவையை சற்று தொலைவில் மாற்றியமைக்க வேண்டுமென வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கோரியுள்ளேன்.

மேலும் யாழ்ப்பாண நகரில் போக்குவரத்து நெரிசல்மிக்க இடமாக யாழ். போதனா வைத்தியசாலை வீதி காணப்படுகின்றது. அங்கு மூன்று முச்சக்கரவண்டி தரிப்பிடங்கள் உள்ளன. அங்கு சேவையில் ஈடுபடும் சாரதிகளின் தொடர்பிலக்கங்களுடன் ஓர் விளம்பர பலகையை வைப்பதன் ஊடாக அங்கு வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.

மேலும் யாழ். நகரில் உள்ள சில புடைவை வியாபார நிலையங்கள் நடைபாதைகளில் புடைவையையும், பொம்மைகளையும் காட்சிப்படுத்துகின்றனர். இதனால் நடைபாதையில் பயணிக்க வேண்டிய மக்கள் வீதியில் நடக்கின்றனர். இதனால் விபத்து ஏற்படுகின்றது. அவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம்” என மேலும் தெரிவித்தார்.

Related Posts