Ad Widget

யாழில் கடையடைப்பு போராட்டம்

புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி  படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் செவ்வாய்க்கிழமை (19) கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

மாணவியின் கொலைக்கு நீதி வேண்டுமென கடைகளின் உரிமையாளர்கள், ஊழியர்கள் இணைந்து கஸ்தூரியார் வீதிச் சந்தியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 13ஆம் திகதி பாடசாலைக்குச் சென்ற மாணவி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையுடன் தொடர்புடைய 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, மூவர் விளக்கமறியலிலும் ஐவர் பொலிஸ் காவலிலும் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மாணவியின் கொடூரகொலைக்கு நீதி வேண்டுமெனவும் இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சம்பந்தப்பட்டவர்கள் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரியும் கடைக்காரர்கள் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை யாழ்.மத்திய கல்லூரி மற்றும் திருக்குடும்ப கன்னியர்மட பாடசாலை, சென்.ஜேம்ஸ் பாடசாலை யாழ் இந்துக்கல்லுாரி உடுவில் மகளிர் கல்லுாரி  யாழ் இந்து மகளிர் கல்லுாரி மாணவர்களும் அமைதியான் முறையில் கண்டன போரட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய தினம் யாழ்நகரில் உதித்த தனியார் போராட்டக்காரர்கள் சட்டவிதிமுறைகளை பேணத்தவறினர். குறிப்பாக யாழ். மத்திய கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்து தம்முடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுமாறு கூறி பாடசாலை கல்விச் செயற்பாட்டை குழப்ப முற்பட்டதுடன் ,சில கடைகளின் பெயர்ப்பலகைகளை சேதமாக்கினர்.

எனவே போராட்டத்தில் ஈடுபடுவோர் சட்டவிதிமுறைகளுக்குட்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் அமைதியான முறையில் தமது போராட்டத்தை முன்னெடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் நாளைய தினமும் குறித்த மாணவிக்கு நீதி வேண்டி இலங்கை ஆசிரியர் சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Posts