Ad Widget

யாழில் கடலில் மிதந்து வந்த கேரள கஞ்சா மீட்பு

நயீனாதீவு கடற்பரப்பில் மிதந்து வந்த ஒருதொகை கேரள கஞ்சாவினை ஊர்காவற்துறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று காலை நயீனாதீவு கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காக சென்றிருந்த மீனவர்கள் சிலர் கடலில் பொதியொன்று மிதந்து வருவதை அவதானித்தனர். இதனையடுத்து இது தொடர்பாக நயீனாதீவில் உள்ள பொலிஸ் காவலரனுக்கு அவர்கள் தகவலளித்துள்ளனர்.

பின்னர் அங்கு விரைந்த பொலிஸார் குறித்த பொதியை கைப்பற்றி சோதனையிட்ட போது, அதனுள் கேரள கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பொலிஸ் நிலையத்திற்கு அதனை எடுத்துச் சென்று அளவிட்டு பார்த்தபோது, அதன் நிறை 52 கிலோகிராமாக காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

எனினும் கேரள கஞ்சாவின் மொத்த நிறை குறைவாகவே இருக்கும் என கூறிய பொலிஸார், தற்போது கடல் நீரில் நனைத்திருப்பதால் அது கூடிய நிறையாக உள்ளதாகவும், தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Posts