Ad Widget

யாழில் எதிர்வரும் 22 ஆம் திகதி முதலீட்டாளர்கள் மாநாடு

யாழ்ப்பாணத்தில் இம் மாதம் 22 ஆம் திகதி முதலீட்டாளர்களின் மாநாடானது நடைபெறவுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் இந்த மாநாடு காலை 10 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 03 மணி வரை நடைபெறவுள்ளது. வடக்கு மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வெளிநாட்டு உள்ளூர் முதலீட்டாளர்களின் முதலீடுகளை வடக்கில் அதிகரிப்பதற்காக இந்த மகாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

e0b3a21850cedaf81974cc6455fe3e91_XL

மாநாடு தொடர்பாக செய்தியாளர்களுக்கு விளக்கமளிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(18) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது ஆளுநர் மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டு அவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால் மாத்திரம் போதுமானதல்ல அவர்களது வாழ்வாதாரத்திற்கும் வழிவகை செய்யப்பட வேண்டும். இதனைக் கருத்திற் கொண்டே பயன்படுத்தப்படாமலிருக்கும் மூலவளங்களை உரிய முறையில் பயன்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவதுடன் நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ஒரு கட்டமாகவே இந்த முதலீடு மாநாடு என்றும் அவர் கூறினார்.

வடமாகாண ஆளுநர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், தெற்கில் போன்றே வடக்கிலும் அபிவிருத்திகள் இடம்பெற வேண்டும். வறுமை இல்லாது ஒழிக்கப்பட வேண்டும். அப்பொழுது தான் சமத்துவ நிலை ஏற்படும். வடக்கு வசந்தத்தின் கீழ் முன்னைய அரசாங்கத்தினால் உட்கட்டமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. ரயில் சேவைகள் வீதிகள் புனரமைக்கப்பட்டன. இடம்பெயர்ந்தவர்களில் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டன. இன்னும் 15,000 குடும்பங்களே குடியமர்த்தப்படவுள்ளனர். நலன்புரி முகாமிலிருந்தவர்களில் 50 சதவீதமானோருக்கு சொந்தமான காணி இல்லை. மீளக்குடியமர்த்தப்பட்ட பின்னரும் பிரச்சினைகளாக சில வாழ்வாதார பிரச்சினைகள் இருந்து கொண்டே தான் இருக்கின்றன.

அதற்காகத் தான் வடக்கில் மூழ்கிக் கிடக்கும் கைத்தொழில்சாலைகளை மீண்டும் ஆரம்பித்து பொருளாதார அபிவிருத்திக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 150 உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். தற்போது யாழ் நல்லூர்க் கந்தனின் ஆலய உற்சவம் ஆரம்பமாகியுள்ளது. இம் மாத இறுதியில் உற்சவம் முடிவடையவுள்ளது. இந்த மாநாட்டுக்கு சிறந்த சந்தர்ப்பமாக இதனை கருதுகின்றோம். இதனால் தான் இக்காலப் பகுதியில் மாநாட்டை நடாத்துகின்றோம். இலங்கையிலிருந்து வெளியேறியவர்கள் மீண்டும் இங்கு வர தயாராகவுள்ளனர். இவர்களிடம் பண வசதி உண்டு. முதலீட்டுக்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். முதலீட்டுக்கான தகவல்களை பல இடங்களில் திரட்ட வேண்டிய சிரமம் இருந்தது. இதனால் நாம் தற்போது அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ளும் வகையில் யாழ்ப்பாண கச்சேரியில் ஒழுங்குகளை செய்துள்ளோம்.

வருடத்தில் ஒன்பது மாதங்களுக்கு சூரிய ஔி வடக்கில் உண்டு. இதனைப் பயன்படுத்தி மின்சாரத்தினை உற்பத்தி செய்ய முடியும். இதே போன்று காற்றின் மூலமாகவும் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான வசதியும் உண்டு. இவற்றைப் பயன்படுத்துவதன் ஊடாக சூழல் மாசடைவது தடுக்கப்படுவதுடன் நாட்டுக்கு வருமானமும் கிடைக்கின்றது. இத்துறையில் முதலீடுகள் அவசியம். நாட்டுக்குத் தேவையான உப்பை நாம் இன்னும் வெளிநாட்டிலிருந்தே இறக்குமதி செய்கின்றோம். இதற்கான வளங்கள் வடக்கில் உண்டு. மூடப்பட்டுள்ள ஆனையிறவு, பரந்தன், தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும்.

நாட்டிலுள்ள பசுக்களில் மூன்றில் ஒன்று வடக்கில் இருக்கின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு இயங்கிய பாற் பண்ணைகள் மூடப்பட்டுள்ளன. திக்கத்தில் மதுபானம் தயாரிக்கக்கூடிய மூலவளம் உண்டு. இவை கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இவற்றின் மூலம் ​கோடிக்கணக்கான ரூபா வருமானத்தைப் பெற முடியும். நாட்டில் மொத்தமாக 119 களப்புக்கள் உண்டு. இவற்றில் பெரும்பாலானவை வடக்கில் உண்டு. மீன் உற்பத்தியை மாத்திரமின்றி சுற்றுலாத்துறையையும் மேம்படுத்த முடியும். பல்வேறான மூலவளங்களை உரிய முறையில் பயன்படுத்துவதற்கு முதலீடுகள் தேவை. நாம் ஏற்றுக் கொண்டாலும் இல்லாவிட்டாலும் தனியார் துறை பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானதாகும்.

அரசாங்கத்தினரால் இவ்வாறான முதலீடுகளை தனித்து மேற்கொள்ள முடியாது. தனியார் துறையினரை இதற்காக அழைக்கின்றோம். நாட்டில் தொடர்ந்து அரசாங்கங்களை நடாத்தி வந்த கட்சிகள் விட்ட தவறை இனியும் நாம் தொடர விட முடியாது. தற்போது இத்தாலி, சீனா, இந்தியா போன்ற நாடுகள் முதலீடுகள் தொடர்பில் ஆர்வம் காட்டியுள்ளன. சில நிறுவனங்கள் திட்டங்களுக்கான அனுமதியை முதலீட்டுக் கிளையிடம் பெற்றுக் கொண்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts