யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்கள் இருவர், எச்.ஐ.வி தொற்று தாக்கத்துக்கு உள்ளாகி இவ்வருடம் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பால்வினை தொற்று நோய் தடுப்பு சிகிச்சை பிரிவின் பொது வைத்தியர் திருமதி தாரணி குருபரன், இன்று புதன்கிழமை (02) தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
உயிரிழந்த இருவரும் 30 வயதையுடையவர்கள். கடந்த வருடம் இந்த தொற்றுக்கு உள்ளாக்கியுள்ளனர் என இனங்காணப்பட்ட 13 பேரில் இந்த இருவரும் உள்ளடங்குகின்றனர். எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டு இறுதி நேரத்தில் பரிசோதனைக்காக வந்தமையால் உரிய சிகிச்சை அவர்களுக்கு வழங்க முடியவில்லை.
மேலும், இந்த வருடம் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.
எச்.ஐ.வி தொற்று தாக்கத்துக்கு உள்ளானவர்கள் என்று இனங்காணப்பட்ட 9 ஆண்கள் மற்றும் 8 பெண்களுக்கு தொடர்ந்தும் மருத்துவ பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இவர்கள் 30 வயதில் இருந்து 40 வயதுக்குட்பட்டவர்கள்.
யாழ்.மாவட்டத்தைவிட வெளி மாவட்டங்களிலிருந்தும் இங்கு சிகிச்சைக்காக பலர் வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.