Ad Widget

யாழில் உண்ணிக் காய்ச்சல் அபாயம்; பெண் உயிரிழப்பு!

உயிர் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய காய்ச்சல் ஒன்று யாழ்ப்பாணத்தில் பரவி வருகிறது. இந்த காய்ச்சல் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார் என யாழ் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

உரும்பிராயை சேர்ந்த 45 வயதான, இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த மாதம் 30ம் திகதி கிளிநொச்சி, இரணைமடுவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த பின்னர், அன்றைய தினமே காய்ச்சலுக்கு உள்ளானார். மறுநாள் 31ம் திகதியிலிருந்து, திருநெல்வேலியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தொடர் சிகிச்சை பெற்றார்.

கடந்த 7ம் திகதி சிகிச்சை பெற சென்ற சமயத்தில் மயங்கி விழுந்துள்ளார். அவர் உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த வைத்தியர்கள், அவர் உண்ணிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டதை கண்டறிந்தனர். அதற்கான சிகிச்சையளிக்கப்பட்டு வந்தபோதும், கடந்த 13ம் திகதி அவர் உயிரிழந்தார்.

இந்த காய்ச்சல் குறித்து, மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், அருகிலுள்ள அரச வைத்தியசாலையொன்றில் முறைப்படி சிகிச்சை பெற்றுக்கொள்ளும்படியும் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Posts