Ad Widget

யாழில் இளைஞர்கள் பொலிஸாரால் சித்திரவதை: மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

யாழில் அடையாள அட்டை கொண்டு செல்லாத இளைஞனையும் அவரது மைத்துனரையும் சுன்னாக பொலிஸார் கைது செய்து தடுப்பு காவலில் வைத்து, கடுமையாக தாக்கி சித்திரவதை செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் யாழ்.பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளதாவது, “கடந்த 19ஆம் திகதி இரவு 10.45 மணியளவில் நானும் எனது மைத்துனரும் முச்சக்கர வண்டியில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தபோது, வீட்டுக்கு அருகாமையில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த சுன்னாகம் பொலிஸார் நாம் பயணித்த முச்சக்கர வண்டியை மறித்து சோதனையிட்டதுடன், முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்ற எனது மைத்துனரிடம் ஆவணங்களை வாங்கி அவற்றையும் பரிசோதித்தனர்.

பின்னர் என்னிடம் அடையாள அட்டையை கோரினர். அப்போது என்னிடம் அடையாள அட்டை இல்லை. வீட்டில் வைத்து விட்டு வந்து விட்டேன் எனவும், வீட்டில் இருந்து எடுத்து வந்து காண்பிக்கின்றேன் எனவும் கூறியதற்கு, அதனை ஏற்காத பொலிஸார் எம்மை முச்சக்கர வண்டியுடன் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு கூட்டிச் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து மைத்துனை பொலிஸாரின் சமையல் அறையில் அடைத்து வைத்து அடித்து சித்திரவதை செய்ததுடன், என்னை தலைகீழாக கட்டி அடித்து சித்திரவதை செய்தனர்.

இதன்போது விடுதலை புலிகள் அமைப்பில் இருந்தீர்களா? என கேட்டே எம்மை தாக்கினார்கள். பின்னர் மறுநாள் எவ்வித சட்ட நடவடிக்கையும் இல்லாது எம்மை விடுவித்தனர்.

இந்நிலையில் பலத்த சித்திரவதைகள், அடிகாயங்களுக்கு உள்ளாகிய நாம் அன்றைய தினம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றோம்.

பின்னர் எம்மீதான தாக்குதல் மற்றும் சித்திரவதை தொடர்பில் யாழ்.பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளோம்” என பாதிக்கப்பட்ட இருவரும் குறிப்பிட்டுள்ளனர்.

Related Posts