Ad Widget

யாழில் இரும்பு விலைக்கு பாரவூர்திகள் விற்கப்படுகின்றன

lorrys-lorryயாழ். மாவட்டத்தில் சேவையில் ஈடுபட்ட முந்நூறுக்கு மேற்பட்ட பாரவூர்திகள் தொழிலின்மையால் இரும்பு விலைக்கு உரிமையாளர்களினால் விற்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பாரவூர்திகள் சங்கத்தின் தலைவர் எஸ்.ஜெயக்குமார் தெரிவித்தார்.

யாழ். பாரவூர்திகள் சங்கத்தின் கோண்டாவில் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்ட பாரவூர்திகள் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த பாரவூர்திகள் ஆரம்ப காலங்களில் காங்கேசன்துறை, பருத்தித்துறைகளுக்கு கப்பலில் கொண்டு வரப்படும் பொருட்களை ஒப்பந்த அடிப்படையில் ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டு வந்தன.

கப்பலில் பொருட்கள் வருவது குறைந்ததினையடுத்து பாரவூர்திகள் பல தொழில் இல்லாமல் இருந்தன.
இந்நிலையில் பாரம்பரிய, சிறிய கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடியதன் பின்னர் அவர் கீழுள்ள மகேஸ்வரி நிதியத்திற்கு பதிவுக்கட்டணமாக 5 ஆயிரம் ரூபா செலுத்தி ஒப்பந்த அடிப்படையில் மணல் ஏற்றி பறிக்கும் நடவடிக்கையில் பாரவூர்திகள் ஈடுபட்டு வந்தன.

இருந்தும் கடந்த ஒரு வருடகாலமாக மகேஸ்வரி நிதியத்தில் மணல் ஏற்றி பறிப்பதற்கான அனுமதி எங்களுக்கு தரப்படவில்லையென்பதுடன், இறுதியாக ஏப்ரல் மாதம் 20 பாரவூர்திகளுக்கு அனுமதி தந்தபோதும், அந்த மாதமே அவை நிறுத்தப்பட்டன.

எமது சங்கத்தில் பதிவு செய்து ஓடக் கூடிய நிலையில் சுமார் 500 முதல் 600 வரையான பாரவூர்திகள் உள்ள போதும், அனைவரும் தொழில் இழந்து நடுத்தெருவில் நிற்கின்றார்கள்.

மகேஸ்வரி நிதியம் தற்போது தங்களது பெயரிலுள்ள 12 பாரிய ரிப்பர்களையும், தமக்கு வேண்டிய ஒரு சில பாரவூர்திகளையும் கொண்டு மணல் ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

அவர்களுடைய ஒரு டிப்பர் ஒரு நாளைக்கு மூன்று தடவைகள் மணல் ஏற்றி பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதுடன், அந்த அனுமதி எங்களுக்கு கிடைத்தால் எங்களுடைய மூன்று பாரவூர்தி உரிமையாளர்கள் பயன்பெறுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts