Ad Widget

யாழில் இடம்பெற்ற போராட்டங்களில் கைதானவர்களில் அப்பாவிகள் விடுவிக்கப்படுவர்! ரணில் கூட்டமைப்புக்கு உறுதியளிப்பு!!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் எதிரொலியாக யாழில் இடம்பெற்ற போராட்டங்களின்போது கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவர்களில் சமூக விரோத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களைத் தவிர ஏனையோர் விரைவில் விடுவிக்கப்படுவர். இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் உறுதியளித்தார் என அக்கட்சியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பிக்குமிடையிலான சந்திப்பு ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அலரிமாளிகையில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பிலேயே பிரதமர் மேற்கண்டவாறு உறுதிமொழி வழங்கியுள்ளார் என்று சுரேஷ் எம்.பி. கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வித்தியா படுகொலை குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து யாழில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டபோது சமூக விரோத செயற்பாட்டில் ஈடுப்பட்டதாகக் கூறி கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்கவேண்டும். அவர்களில் பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளனர். அப்பாவி இளைஞர்களும் உள்ளனர். அவர்களைத் தொடர்ந்தும் தடுத்துவைக்காது விடுதலைசெய்யவேண்டும் என்ற கோரிக்கையையும் மேற்படி சந்திப்பில் நான் விடுத்தேன். இதற்குப் பிரதமர் பதிலளிக்கும்போதே மேற்கண்ட உறுதிமொழிகளை வழங்கினார் – என்றார் சுரேஷ் எம்.பி.

Related Posts