Ad Widget

யாழில் அதிகரிக்கும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை

யாழ். மாவட்டத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டு உள்ளிட்ட குற்றச்செயல்கள் உடன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உறுதியளித்துள்ளார்.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தரவிற்கும் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் மற்றும் அகில இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் உள்ளிட்ட குழுவினருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பிலே பொலிஸ் மாஅதிபர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதோடு, குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள் எனவும் உறுதியளித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் அண்மைக் காலமாக அதிகரித்துள்ள வாள் வெட்டுச் சம்பங்கள், ஆவா உள்ளிட்ட குழுக்களின் குற்றச்செயல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் உடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல், பொதுமக்கள் பாதுகாப்பு நிலைமைகள் தொரடர்பாக இந்தச் சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

குறித்த விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்துவதாக இதன்போது பொலிஸ்மா அதிபர் தெரிவித்ததோடு, சம்பவங்களுடன் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டுள்ளதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் பொலிஸ் மாஅதிபருடனான கலந்துரையாடல் திருப்திகரமாக அமைந்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் தமது கருத்தோடு பொலிஸ்மா அதிபரும் இணங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் நடைபெறும் போது பொதுமக்கள் உடனடியாகப் பொலிஸாருக்கு அறிவிக்கக்கூடிய வகையில் தமிழ் மொழியிலான துரித தொலைபேசி அழைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் டி.எம். சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts