Ad Widget

யாரையும் பாதிக்காத வகையில் இனப்பிரச்சினை தீர்வு எட்டப்படும்: பிரதமர்

தமிழ், சிங்கள எந்த இனத்தவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் மதனவாசனின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், இனப்பிரச்சினைக்கான தீர்வில் தமக்கு பாதிப்பு ஏற்படுமா என்று சிங்கள மக்கள் அச்சமடைகின்றனர். அதேவேளை, தமக்கான வாழ்வுரிமை பாதிக்கப்படுமா என தமிழர்கள் யோசிக்கின்றனர். ஆனால் எந்த இனத்தவரையும் பாதிக்காத வகையில் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை நாம் தொடர்ந்தும் மேற்கொள்வோம்.

மேலும், அதிகாரத்தை பங்கீடு செய்வது குறித்து நாம் சிந்தித்து வருவதுடன், தமிழ் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்த வேலைத்திட்டம் ஒன்றையும் முன்னெடுத்து வருகிறோம்.

அதிகாரத்தை அடையும் நோக்கில் தென்னிலங்கை அரசியல்வாதிகளும், வேறு சில அரசியல்வாதிகளும் இனவாத மற்றும் மதவாத கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். வடக்கில் பிரச்சினைகள் உள்ளது. அதேபோல் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் பிரச்சினைகள் இருக்கின்றன. அதனை நாம் தீர்க்க முயற்சிக்கின்றோம்.

முன்னைய ஆட்சிக் காலத்தில் ஊடகச் சுதந்திரம் இருக்கவில்லை. ஆனால் தற்போது ஊடகச் சுதந்திரம் இருக்கின்றது. இன்று யாரும் அச்சமின்றி எதனையும் எழுதக் கூடிய சூழல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

Related Posts