Ad Widget

யாருடைய அழுத்தத்திற்கும் அஞ்சி கலப்பு நீதிமன்றத்தை உருவாக்க மாட்டோம்: அரசாங்கம் திட்டவட்டம்

எத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்படினும் இலங்கையில் எந்த தருணத்திலும் கலப்பு நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட மாட்டாது என்று அரசாங்கம் மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “மனித உரிமை விவகாரம் தொடர்பில் கலப்பு நீதிமன்றத்தையோ, சர்வதேச நீதிபதிகளையோ அனுமதிக்கப் போவதில்லை. இலங்கையின் உள்விவகாரங்களைக் கையாளக்கூடிய இயலுமை அரசாங்கத்துக்கு உள்ளது.

இந்த நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கமும் காணப்படுகிறது.

தற்போது இலங்கைக்கு எவ்வித அழுத்தங்களும் கிடையாது. நீதித்துறை சுயாதீனமாக செயற்படுகிறது. இந்நிலையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு நீதிபதிகள் விசாரணை நடத்த மாட்டார்கள். அவ்வாறு விசாரணை நடத்துவதற்கு இடமளிக்கவும் மாட்டோம்” என்றும் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கை தொடர்பில் உத்தியோகபூர்வமாக வெளியிடவுள்ள அறிக்கையில், இலங்கை அரசாங்கம் கலப்பு நீதிமன்றத்தை உருவாக்குவதற்கான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் போர்க்குற்ற விசாரணைகளில் அரசாங்கம் பிழையான முறையில் தாமதம் காட்டி வருவதாகவும் சுட்டிக்காட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் பிரதியமைச்சர் இவ்வாறான கருத்தை தெரிவித்துள்ளார்.

Related Posts