Ad Widget

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும் – சங்கரி

ஜனாதிபதித் தேர்தலில் தாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தமிழ் மக்கள் அவர்களாகவே தீர்மானிக்க வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது.
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஒவ்வொரு தமிழரும் மிகக் கவனமாக பரிசீலித்து, வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை நன்கு ஆராய்ந்து யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுக்கவேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் விட்ட தவறை மீண்டும் மேற்கொள்ளாது, தேர்தலை பகிஷ்கரிக்கும் எண்ணத்தையும் கைவிட வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் இலங்கை சரித்திரத்தில் மிகவும் இக்கட்டான ஒரு தேர்தல் என்பதால், தமிழ் மக்கள் தமது தெரிவில் மிகக் கவனத்துடன் செயற்பட வேண்டும் என்றும் வீ.ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் நடந்தவற்றை அடிப்படையாக நோக்குமிடத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் தலையிடாது ஒதுங்கியிருப்பதுடன், தமிழ் மக்களை அவர்களின் இஷ்டப்படி வாக்களிப்பதற்கான முடிவை எடுப்பதற்கு விட்டுவிட வேண்டும் எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
எனவே, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தகுதியானவர்களிடம் சிறந்த ஆலோசனைகளைப் பெற்று, காலம் கடத்தாமல் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முயற்சிக்க வேண்டும் எனவும் வீ. ஆனந்தசங்கரி வலியுறுத்தியுள்ளார்.

Related Posts