Ad Widget

யானைகள் கடலுக்குள் நீந்தி செல்வது வழக்கத்துக்கு மாறான நிகழ்வு!

நாட்டில் உள்ள யானைகள் கடலுக்குள் நீந்தி செல்வது வழக்கத்திற்கு மாறான ஒன்று என வன பாதுகாப்பு ஆய்வு மத்திய தலைவரான பேராசிரியர் பிரித்திராஜ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த 12 மற்றும் 23ஆம் திகதியில் கிழக்கு கடலில் நீந்திச் சென்ற மூன்று யானைகளை கடற்படையினர் காப்பாற்றியிருந்தனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “கடற்படை தரப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லை.

எவ்வாறாயினும், இது போன்ற சம்பவங்கள் இதற்கு முன்னரும் இடம்பெற்றுள்ளன. இதில் கடந்த 12ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தில் யானை கடலுக்குள் நீண்ட தூரம் சென்றுள்ளது. சோர்வுற்ற நிலையில் காணப்பட்டுள்ளது.

இரண்டாவது சம்பவத்துடன் தொடர்புடைய இரு யானைகளும் அந்த பிரதேசத்தில் நடமாடிய யானைகள் என்று அறிய முடிந்தது. பிரித்தானியர் காலத்தில் திருகோணமலை பகுதியிலுள்ள தீவுகளுக்கு யானைகள் நீந்தி சென்ற நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், சிலநேரத்தில் இந்த இரு சம்பவங்களிலும், யானை தீவை நோக்கி பயணித்து, இறுதியில் கடலின் நடுப்பகுதிக்கு அடித்து செல்லப்பட்டிருக்கலாம்.

யானைகள் நன்றாக நீந்தக் கூடியது. பெரிய உடம்பு என்பதால் மிதக்கக் கூடியது. இருந்தாலும் நீண்ட நேரத்திற்கு அப்படி இருக்க முடியாது. எவ்வாறாயினும், இந்த சம்பவங்கள் சூழல் தாக்கமாக இருக்குமா? என்பது குறித்து தெளிவாக கூற முடியாது.

தற்போது கடும் வறட்சி நிலவுகின்றது. இதன் காரணமாக கடலுக்கு போய் இருக்குமா?என்று நினைப்பதும் கடினம். இரு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்காது என்றே நினை தோன்றுகின்றது.

இது போன்று மற்றுமோர் நிகழ்வு இடம்பெறுமாக இருந்தால் அது குறித்து கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இதேவேளை, இந்தியாவில் அந்தமான் தீவில் யானைகள் கடலுக்குள் நீந்திச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றன.

எனினும், இலங்கையில் தான் யானைகள் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts