மோதலுடன் தொடர்புடைய மாணவர்களை சிறைவைக்காதது ஏன்?சத்தாதிஸ்ஸ தேரர்

யாழ் பல்கலைக்கழக மோதலுடன் தொடர்புடைய தமிழ் மாணவர்களை கைதுசெய்து விளக்கமறியலில் வைக்கப்படாதது குறித்து சிங்கள பேரினவாத அமைப்பான ராவணா பலய என்ற அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

பகிடிவதை மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் தென்பகுதியிலுள்ள பல்லைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சிங்கள அப்பாவி மாணவர்களை தாக்கி காயப்படுத்திய தமிழ் மாணவர்களை சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொலிசார் நடவடிக்கை எடுக்காதிருக்க என்ன காரணம் என்றும் ராவணா பலய என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அது மாத்திரமன்றி யாழ் பல்கலைக்கழக மோதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் டி.சிசீந்திரன் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கக்கூடாது என்றும் பௌத்த பிக்கு தெரிவித்துள்ளார்.

“ஏனைய பல்கலைக்கழங்களில் இடம்பெற்ற பகிடிவதை தொடர்பில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் இதுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மோதலில் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்து வைத்தியசாலையில் உள்ள அந்த மாணவனுக்கு நீதி நிலைநாட்டப்படவில்லை. ஒரு சாராருக்கு ஒரு நீதியும், மற்றைய தரப்பினருக்கு இன்னுமொரு நீதியும் நடைமுறைப்படுத்துவதற்கு ஏன் அரசாங்கம் அஞ்சுகின்றது என்பதே எமது கேள்வி. மோதலில் படுகாயமடைந்த மாணவன் இன்னும் வைத்தியசாலையில் இருக்கும் நிலையில் அதனுடன் சம்பந்தப்பட்ட மற்றைய மாணவன் விடுதலை செய்யப்பட்டது எந்த வகையில் நியாயம்? இந்த நாட்டில் ஏதாவது ஒரு சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சையின் பின் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பும்வரை சந்தேக நபருக்கு பிணை வழங்கப்படாது. எனினும் இந்த சம்பவத்தில் சீக்கிரமாக பிணை வழங்கப்பட்டதோடு அதற்காக சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார்.

நல்லிணக்கம் என்பது தலை மீது தாக்குவதும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்குள் பிரவேசிப்போரை அடித்துவிரட்டுவதும், அவர்கள் மீது தாக்குவதும், சிங்கள கலாசார விழுமியங்களை உடைத்தெறிவதும் அல்ல. ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் செயற்படுவதே நல்லிணக்கம். மீண்டும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு குறித்த மாணவர்கள் சென்றால் அவர்களது பாதுகாப்பிற்கு பொறுப்பு கூறுவது யார்? இந்த தாக்குதலை விடவும் திட்டமிடப்பட்ட தாக்குதலை நடத்தினால் ஏற்படும் இழப்பிற்கு இவ்வாறா பதிலளிப்பீர்கள் என்று அரசாங்கத்திடம் கேட்கின்றோம். எனவே யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பிற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும். சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள். பல்கலைக்கழக ஒழுக்காற்று என்பது புறம்பாக மேற்கொள்ளப்பட வேண்டியதொன்று. ஆனால் சட்டம் என்பது அதற்கும் மேற்பட்டது. எனவே சட்டத்தை அமுல்படுத்திய பின் ஒழுக்காற்று நடவடிக்கைக்குச் செல்லுமாறு தெரிவிக்கின்றோம்” என்றார்.

எவ்வாறாயினும் கடந்த 16 ஆம் திகதி யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் கண்டிய நடனத்தை சிங்கள மாணவர்கள் புகுத்தியதால், சிங்கள மாணவர்களுக்கும் – தமிழ் மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலால் ஏற்பட்டிருந்த முரண்பாடுகள் தற்போது களையப்பட்டு, இரு மாணவக் குழுக்களும் வழமைபோல் தமது பணிகளை தொடர்கின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Related Posts