Ad Widget

மொழி, மத பேதங்களை களைவதன்மூலமே எமது நாட்டில் அமைதியை ஏற்படுத்த முடியும்!- ஜனாதிபதி

இந்த நாட்டில் இனி ஒரு யுத்த சூழல் ஏற்பட நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். மீண்டும் யுத்தம் ஏற்படுவதை தடுப்பதற்கு குண்டுகளும் துப்பாக்கிகளும் எமக்கு உதவாதவை. பதிலாக மொழி, மத பேதங்களைக் களைந்து எல்லா மக்கள் மத்தியிலும் நம்பிக்கையை ஏற்படுத்துவதன் மூலமே அமைதி சூழலை உருவாக்கமுடியும். -இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

போதகர் ஒன்றியத்தின் “விளஸ் ஸ்ரீலங்கா” அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்ற ‘பாஸ்கா பண்டிகை’ நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவித்தவை வருமாறு:-

ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தேவையான முக்கிய அம்சங்களில் மதமும் மதக்கோட்பாடுகளும் முதன்மை பெறுகின்றன. நல்லவர்களை சமூகத்தில் உருவாக்குவதற்கே மதங்கள் போதிக்கப்படுகின்றன. ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு எங்களுக்கு மதரீதியான ஒரு நோக்கு இருக்கவேண்டும். இயேசுபிரான் எமக்குக் காட்டிய வழி மனிதாபிமான – மனிதநேயம்கொண்ட – சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான வழியென்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

ஒரு சமூகத்தையோ நாட்டையோ கட்டியெழுப்பப்புவதற்கு சமாதானம் மிகமிக அவசியம். இதற்கு மனிதன் மனிதனாக மற்றைய மனிதன் மீது அன்பு, இரக்கம் காட்டவேண்டும். அப்போது சமூகத்தில் இருக்கின்ற மற்றையவர்களும் மற்றவர்கள் மீது அன்பு, இரக்கம் காட்டுவார்கள்.

இந்த நாட்டில் பன்மொழி, பல்மத மக்கள் வாழ்கின்றனர்.அவ்வாறான மக்களுக்கு தங்களது மதங்களை பின்பற்றுவதற்கான, மொழியைப் பேசுவதற்கான முழுமையான சுதந்திரம் இருக்கவேண்டும். எனவே எமது அரசாங்கம் எல்லா மக்கள் மத்தியிலும் சகவாழ்வையும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளக்கூடிய புரிந்துணர்வையும் உருவாக்கவே முயற்சிக்கிறது.

இந்த நாட்டில் எவரும் சந்தேகத்தோடும்,பீதியோடும் வாழும் அவசியம் இல்லை. மாறாக அனைத்து மக்களும் அன்போடும் புரிந்துணர்வோடும் வாழக்கூடிய சூழ்நிலையை எமது புதிய அரசாங்கம் உருவாக்கும்.- என்றார்.

Related Posts