Ad Widget

மைத்திரி அரசின் 100 நாள் திட்டத்தில் ஆக்கபூர்வமான சில செயல்கள்முன்னெடுப்பு!

“ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான தேசிய அரசின் நூறு நாள் வேலைத்திட்டத்தில் ஆக்கபூர்வமான சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

sambanthan 1_CI

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசின் நூறு நாள் வேலைத்திட்டம் இன்றுடன் நிறைவடைகின்றது. இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனவரி 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் தேசிய அரசு அமையப்பெற்று நூறு நாள் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இத்திட்டத்தில் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான பொறிமுறை காணப்படவில்லை. எனினும், நாட்டை ஜனநாயக ரீதியாக முன்னேற்றமடையச் செய்வதற்கும், மக்களின் இறைமையை மீட்டெடுப்பதற்கும், சர்வாதிகாரத்தை வலுப்படுத்தும் நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறைமையை நீக்குவதற்கும், நீதித்துறையைப் பலப்படுத்துவதற்குமான செயற்றிட்டங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டு அவை முன்னெடுக்கப்படுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் போர் நிறைவடைந்ததன் பின்னரும் தொடர்ச்சியாக முகங்கொடுத்துவரும் பிரச்சினைகளான காணி அபகரிப்பு, காணமல்போனார் விடயம், அரசியல் கைதிகள் விடுதலை, மீள்குடியேற்றம், விதவைப் பெண்களின் அபிவிருத்தி உள்ளிட்ட அன்றாட வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக முதற்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

அச்செயற்பாடுகள் வேகமாக முன்னெடுக்கப்படாது விட்டாலும் கடந்த அரசு தமிழ் மக்களின் இப்பிரச்சினைகள் தொடர்பாக எவ்விதமான கரிசனையையும் காட்டவில்லை.

அவ்வாறான நிலையில் தேசிய அரசு நூறு நாள் வேலைத்திட்டத்தினுள் அவ்விடயங்கள் தொடர்பில் அக்கறை செலுத்தியிருப்பதானது நல்லெண்ணத்தை வெளிப்படுத்துமொரு நடவடிக்கையாகும். நீண்டகாலமாக காணப்படும் தேசிய பிரச்சினைக்குத் தீர்வை எட்டுவதற்கான பொறிமுறையொன்று உள்வாங்கப்பட்டு தாமதமின்றி அக்கருமம் ஊக்குவிக்கப்பட்டு முன்னெடுப்படவேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.

அதன் ஊடாகவே ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் நீடித்து நிலைத்திருக்கக்கூடிய நியாயமான தீர்வொன்றை அடையமுடியும்” – என்றார்.

Related Posts