Ad Widget

மே 18ஆம் திகதி டெங்கு ஒழிப்பு எனும் போர்வையில் தமிழ் மக்களை அச்சுறுத்த இடமளியோம்: சிவாஜிலிங்கம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமான மே 18ஆம் திகதி, டெங்கு ஒழிப்பு எனும் போர்வையில் வீடு வீடாக சென்று பொலிஸாரும், இராணுவத்தினரும் எமது தமிழ் மக்களை அச்சுறுவதை அனுமதிக்க முடியாது என வட. மாகாண உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

மே மாதம் 18ஆம் திகதி மத்திய அரசினால் டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர், “மே மாதம் 18 மற்றும் 19 ஆகிய இரு நாட்கள் இலங்கையில் டெங்கு ஒழிப்பு தினங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
மே 18 என்பது ஈழத்தமிழர்களுடைய துக்க நாளாகும். எனவே, தமிழ் தேசத்துடைய துக்க தினத்தில் தமிழர் தாயகத்தில் டெங்கு ஒழிப்பு தினத்தை அனுஷ்டிப்பதை அனுமதிக்க முடியாது. அதனை வேறொரு தினத்திற்கு மாற்ற வேண்டும்.

அதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் டெங்கு ஒழிப்பு எனும் போர்வையில் பொலிஸாரும், இராணுவத்தினரும் எமது தமிழ் மக்களை அச்சுறுவதை அனுமதிக்க முடியாது.

டெங்கு ஒழிப்பு தினத்தை ஒத்திவைக்க மத்திய அரசு மறுப்பினும், அதனை புறக்கணிக்கும் வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசுகள் செயற்பட வேண்டும்.
தமிழர்களுடைய தேசிய துக்க தினத்தில் வேறு எவ்வித நிகழ்வுகளையும் நடத்த அனுமதிக்க மாட்டோம்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts