வவுனியா புளியங்குளத்தில் ஏ-9, வீதியில் பஸ்ஸூக்காக காத்து நின்ற முன்னாள் போராளி ஒருவர், திடீரென மயங்கி வீழ்ந்ததையடுத்து சக பயணிகளால் மீட்கப்பட்டு, புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சை வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது, இடை வழியில் அவர் உயிரிழந்த சம்பவம், சனிக்கிழமை (24)இடம்பெற்றுள்ளது.
நெடுங்கேணி குழவிசுட்டான் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளியான ஆசீர்வாதம் ஸ்ரிபன் (வயது 36) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தன்று மாலை, குறித்த நபர் யாழ்ப்பாணத்திலிருக்கும் தனது உறவினரின் வீட்டிற்கு செல்வதற்கு புளியங்குளம் சந்தியில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த போது மயங்கி விழுந்துள்ளார்.
சடலம், தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக, வவுனியா வைத்தியசாலைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை நெடுங்கேணி மற்றும் புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.