Ad Widget

கடத்தப்பட்ட சிறுமியை மூன்று மாதங்களா தேடும் பொலிஸார்!

kidnap-100x80சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், அவர் குறித்த தகவல்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. அதையடுத்து சிறுமியைக் கடத்தியவரது பெற்றோரின் தொலைபேசி இலக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட அழைப்புகள் குறித்த தரவுகளைச் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

இளவாலைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குறித்த சிறுமி கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதி சிறுமி தனியார் கல்வி நிறுவனத்துக்குச் சென்றுகொண்டிருந்த போது கடத்தப்பட்டார். அவரது வீட்டில் வேலை செய்யும் 25 வயதுடைய இளைஞனே சிறுமியைக் கடத்தினார் என்று கூறப்படுகின்றது.

கடத்திய நபர் காரைநகரில் உள்ளார் என்று கிடைத்த தகவலை அடுத்துப் பொலிஸார் அங்கு சென்ற போதும், குறித்த சிறுமியின் ஆடைகள் சிலவற்றையே அவர்களால் மீட்கமுடிந்தது. குறித்த நபர் பொலிஸார் வருவதற்கு முன்னரே தப்பிச் சென்றுவிட்டார். அதையடுத்து குறித்த நபரின் தந்தையும், சகோதரனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். குறித்த நபரை நீதிமன்றில் ஒப்படைப்பதாக அவர்கள் கூறியதை அடுத்து அவர்களுக்கு நீதிமன்ற பிணை வழங்கியது. ஆயினும் இதுவரை குறித்த நபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவில்லை.

யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றில் நீதிவான் திருமதி ஜீவராணி முன்னிலையில் நேற்று இந்தச் சம்பவம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கின் அடுத்த தவணையின் போது சந்தேக நபரை ஒப்படைக்க வேண்டும் என்றும், ஒப்படைக்கத் தவறும் பட்சத்தில் தந்தையையும், மூத்த சகோதரனையும் விளக்கமறியலில் வைக்க வேண்டி ஏற்படும் என்று நீதிமன்று உத்தரவிட்டது.

சிறுமி சார்பாக முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி ஜொனி மதுரநாயகம், சந்தேக நபரின் பெற்றோரின் தொலைபேசி இலக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட அமைழப்புகளின் தரவுகளைப் பரிசீலனைக்குட்படுத்துமாறு கோரியதை அடுத்து, அதுகுறித்த தரவுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கு எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Posts