Ad Widget

மூன்று மகன்களை இழந்து தவிக்கும் தாய்!

தொழிலுக்கு சென்ற இரண்டு மகன்களை காணவில்லை, மற்றைய மகனை தொழில் விட்டு வரும் போது சுட்டுக் கொன்றார்கள், நான் தற்போது மூன்று பிள்ளைகள் இன்றி வாழ்கின்றேன் என கண்ணீருடன் வாழைச்சேனை புதுக்குடியிருப்பை சேர்ந்த எஸ்.யோகமலர் என்னும் தாயார் தெரிவித்தார்.

missing-mother-batticallow

காணாமல் போனவர்களைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மூன்றாவது அமர்வின் மூன்றாவது நாள் விசாரணை வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனது மூன்று மகன்கள் இல்லாமல் போய் விட்டனர். ஒரு மகன் வாகரை – கண்டலடியில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்தவர். 1994ம் ஆண்டு காணாமல் போனார், யார் கடத்திக் கொண்டு சென்றார்கள் என்பது தெரியாது. அக்காலப் பகுதியில் இராணுவத்தினரும், விடுதலைப் புலிகளும் இருந்தார்கள். யார் கொண்டு போனார்கள் என்று தெரியாது.

இதுவரையில் அவர் தொடர்பான தகவல்கள் தெரியவில்லை. மற்றைய மகன் கண்டலடி தரவைப் பகுதியில் வயல் வேலை செய்து கொண்டிருந்த போது காணாமல் போனார். அவருக்கு இதுவரையில் என்ன நடந்தது என்பது கூட தெரியாத நிலையே இருக்கின்றது.

இதுவரையில் நான் பொலிஸ் நிலையத்திலும் முறையிடவில்லை. மரணச் சான்றிதழும் பெறவில்லை. எனது மூன்றாவது மகன் 2006ம் ஆண்டு புதுக்குடியிருப்பில் உள்ள ஸ்ரூடியோவில் வேலை செய்து விட்டு வரும் போது இனந்தெரியாதவர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நான் மூன்று மகன்களை இழந்து நிற்கின்றேன். நான் கண்ணீரோடும், துன்பத்தோடுமே எனது காலத்தினை கழித்து வருகின்றேன். எனக்கு ஒரு நல்ல முடிவினை இந்த ஆணைக்குழு பெற்றுக் கொடுக்க வேண்டும். இங்கு மகனை, கணவனை தொலைத்தவர்களும், வந்துள்ளார்கள் அவர்களுக்கும் நல்ல முடிவினை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

என்னைப்போல் எத்தனை தாய்மார்கள் உள்ளார்கள். அவர்களுக்கு இந்த ஆணைக்குழு சிறந்த தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் என நம்பியே வந்துள்ளேன். நான் மூன்று பேரை இழந்துள்ளேன். நான் மட்டும் இழக்கவில்லை. இன்று எத்தனையோ பேர் இங்கு வந்துள்ளார்கள்.

கண்ணீரோடும் துன்பத்தோடும் உள்ளார்கள். கடத்திச் செல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள், சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக மக்கள் வேதனையுடனும் கண்ணீருடன் வாழ்கின்றனர், என அவர் கூறினார்.

திங்கட்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் மாலை 05.00 மணி வரை நடைபெற்ற அமர்வில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் சுமார் 175 பேர் சாட்சியங்களை அளித்தனர், என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts