Ad Widget

மூன்று பொலிஸ் அதிகாரிகளை கைது செய்ய உத்தரவு

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த வழக்கில் அப்போதைய சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களை கைதுசெய்யுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2011ஆம் ஆண்டு இடம்பெற்ற சந்தேகநபரின் மரணம் தொடர்பில் குற்றம்சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் 3 பேரினதும் வெளிநாட்டு பயணங்களுக்கும் தடைவிதித்து நீதவான் ஏ.ஏ.ஆனந்தராசா உத்தரவிட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த புன்னாலைக்கட்டுவன் தெற்கு சுன்னாகத்தைச் சேர்ந்த ஸ்ரீஸ்கந்தராசா சுமன் என்ற நபர் 2011 ஆம் ஆண்டு உயிரிழந்திருந்தார்.

களவு தொடர்பான வழக்கொன்றில் கைதுசெய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோதே இவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் சுமன் எனப்படும் சந்தேகநபர் பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற நிலையில் கிளிநொச்சி இரணைமடுக்குளத்தில் வீழ்ந்து உயிரிழந்ததாக அப்போது பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.

எனினும் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது குறித்த நபர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதுடன் சித்திரவதைகளுக்கும் உட்படுத்தப்பட்டார் என்று அவருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய சந்தேகநபர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், குளத்திலிருந்து கைப்பற்றப்பட்ட சடலத்தில் தாக்குதல் நடாத்தப்பட்டமைக்கான அடையாளங்கள் காணப்பட்டமை பிரேத பரிசோதனைகளின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் உறவினர்களின் கோரிக்கைக்கு அமைய நீதிமன்றத்தால் இரகசிய பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இதன்படி இரகசிய பொலிஸாரினால் நடாத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக இதுவொரு கொலை என நம்பக்கூடியவாறான சாட்சியங்கள் உள்ளதென இரகசிய பொலிஸார், சட்டமா அதிபர் திணைக்கத்திற்கு அறிவித்திருந்தனர்.

இதன்படி சாட்சியங்களை ஆராய்ந்த சட்ட மாஅதிபர் குறித்த சந்தேகநபர்களான சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியாக அப்போது கடமையாற்றிய பிரியந்த பண்டார மற்றும் அதே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய ஏனைய 3 பொலிஸ் அதிகாரிகளையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கடந்த வாரம் இரகசிய பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்கள பொறுப்பதிகாரி கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தார்.

குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராசாவும் சந்தேக நபர்களான பொலிஸாரைக் கைதுசெய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts