Ad Widget

முஸ்லிம்கள் மீதான வன்முறையைக் கண்டித்து யாழ்.பல்கலையில் ஆர்ப்பாட்டம்

jaffna-universityமுஸ்லிம் மக்களுக்கு எதிராக கொழும்பு அளுத்கம பகுதியில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

அளுத்கம பகுதியில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான கடந்த 15ம் திகதி தொடக்கம் நடைபெற்று வருகின்ற வன்முறைச் சம்பவங்களில் 3மாத குழந்தை உட்பட 4பேர் உயிரிழந்துள்ளதுடன் 80 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தும் பல லட்சக்கணக்கான சொத்துக்களும் சேதமாக்கப்பட்டன.

இந்த செயற்பாடானது இனங்களுக்கிடையில் மிக மோசமான முரண்பாடுகளை உருவாக்கும் எனவே இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் இராசகுமாரன் தெரிவித்துள்ளார்.

இன்று மதியம் 12 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீட மாணவர்கள் ஆசிரியர்கள் ஊழியர்கள் என அனைவரும் கலந்துகொண்டு தமது ஆதரவையும் வழங்கினர்.

“இன நல்லிணக்கம் சிறுபான்மை இனத்தை அழிப்பதா?”, “அழிக்காதே அழிக்காதே சிறுபான்மையினர் சொத்துக்களை அழிக்காதே”, “பொலிஸ் அதிகாரம் மாகாணங்களுக்கு வேண்டும்”, “இன,மத,மொழிப் பேதங்களைக் களைந்து அனைவரும் ஒற்றுமையோடு வாழ வேண்டும்” , “30 வருட யுத்தம் கற்றுத்தந்தது என்ன?” ஆகிய பதாதைகளைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Posts