முஸ்லிம்கள் அரேபியாவுக்கு செல்ல தயாராகுமாறு ஞானசார தேரர் எச்சரிக்கை

மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் தலைமை பிக்கு சுமனரத்ன தேரரின் சுகதுக்கங்களை விசாரிப்பதற்காக சென்ற தங்களை தடுத்து நிறுத்திய ஸ்ரீலங்கா பொலிஸாருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பேரினவாத அமைப்பான பொதுபல சேனா அறிவித்துள்ளது.

சிங்கள மக்களிடம் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் காயப்படவே இவ்வாறான தடைகள் சூழ்ச்சிகரமாக விதிக்கப்படுவதாகவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

“கொழும்பு கிருளப்பனையில் அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்தில் நேற்றய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்

‘மட்டக்களப்பு நோக்கிய எமது பணயத்தில் பொலனறுவையை கடந்த பின்னர் வழமைபோல நல்லாட்சி அரசாங்கத்தின் பொலிஸார் இரண்டு நீதிமன்றங்களினால் விடுக்கப்பட்ட தடை உத்தரவுகளை கொண்டுவந்து நீட்டினார்கள். ஆர்ப்பாட்டங்கள் செய்யத்தடை, வீதிகளை மறிக்கக்கூடாது, ஏதோ ஓர் இடத்திற்குள் நுழையத் தடை போன்ற உத்தரவுகள் இருந்தன. ஆனால் இந்த இடம் தூத்துக்குடியிலா இருக்கின்றது என்பதை நீதிமன்ற தடை உத்தரவில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. சில இனவாத குழுக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உதவியுடன் எமது பயணத்தை தடைசெய்ய முயற்சித்திருக்கின்றன. வெகுவிரைவில் சிங்கள மக்களின் தாக்குதலுக்கு இலக்காகி அதனை சர்வதேச அரங்கிற்குக் கொண்டுசெல்லவே இவ்வாறான நாடகத்தை அவர்கள் செய்கின்றனர். இந்த நாட்டிலுள்ள அனைவருக்கும் எங்கு சென்று நிலங்களைத் தொடவும், நடக்கவும் உரிமை உள்ளது. ஆனால் அதற்கும் இடமளிக்காத பொலிஸார் யாரோ சிலரது உத்தரவைப் பெற்று எமது பயணத்தை தடுத்து வீதியை மறித்தனர். இந்த நாட்டிலுள்ள பொலிஸாரின் தடிகள் சிங்கள மக்களைப் பார்த்தவுடன்தான் மேலெழும்புகிறது. ஆனால் இனவாதக் குழுக்களைப் பார்த்தாலும் பொலிஸாரின் தடிகள் மேலெழும்புவதில்லை. வடக்கில் தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை வைத்து மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்தனர். தமிழ் சமூகத்தை பின்வாங்கச் செய்தது விடுதலைப் புலிகளே என்றாலும் முட்டாள் தமிழ் மக்களுக்கு இன்னும் அது புரியவில்லை. இதனை கண்டுகொள்ளாத புலனாய்வுப் பிரிவு சிங்களவர்கள் சிறிய ஏதாவது ஒன்றை செய்தால் தடியை உயர்த்துகின்றது. எனவே எமது உரிமையை தடுத்த பொலிஸாருக்கு எதிராக நீதிமன்றம் செல்ல எதிர்பார்க்கின்றோம்” – என்றார்.

இதேவேளை தமிழ் மக்கள் திருட்டுத்தனமாக படகுகளில் இந்தியாவிலிருந்து ஸ்ரீலங்காவிற்கு வந்ததாக தெரிவித்திருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், நேற்றய ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஸ்ரீலங்காவிலுள்ள முஸ்லிம் மக்களை தத்தமது பொதிகளை தயார் செய்து அரேபிய நாடுகளுக்கு புறப்படுமாறு எச்சரித்தார்.

“நாட்டில் அரசியலமைப்பு படி சட்டமொன்று காணப்படுகிறது. அதனையும் மீறி முஸ்லிம் மக்கள் குவாசி நீதிமன்றம் எதற்காக கோருகின்றனர்? இது பிழை. அபிவிருத்தியடையும் நாட்டில் ஒரே சட்டமே காணப்பட வேண்டும். சர்யா சட்டம் வேண்டுமென்றால் முஸ்லிம் மக்கள் அனைவரும் தத்தமது பொதிகளைக் கட்டிக்கொண்டு அந்த சட்டம் அமுலில் காணப்படுகின்ற அரேபிய நாடுகளுக்குச் செல்லுங்கள்” – என்றார்.

Related Posts