Ad Widget

முஸ்லிம்களின் வெளியேற்றம் இனச் சுத்திகரிப்பு இல்லை – டக்ளஸ்

பழைய பிரச்சினைகளை கிளறி மக்களைக் குழப்பி அரசியல் சுயலாபம் தேடும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

முஸ்லீம் மக்களை யாழிலிருந்து வெளியேற்றியமை இனச்சுத்திரிகரிப்பு என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறுவது சரியானதா என்பது தொடர்பில் அவரிடம் வினாவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், ‘சுமந்திரன் கூறுவது தவறானது. முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டமை தவறு. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், அதற்கு இனச்சுத்திகரிப்பு என்று பயன்படுத்தக்கூடாது. தற்போது இன ஐக்கியத்தை ஏற்படுத்த அனைவரும் சேர்ந்து செயற்படுத்த வேண்டும். அதனைவிடுத்து, பழைய பிரச்சினைகளைக் கிளறி மக்களைக் குழப்பக்கூடாது. உள்நோக்கங்களுக்காக அவ்வாறான கருத்துக்களை முன்வைக்கக்கூடாது. முஸ்லீம் மக்களும் அவ்வாறானதொரு பதத்தைக் கோரவில்லை’ என்றார்.

‘அனைத்துத் தரப்பிலும் தவறுகள் கடந்தகாலங்களில் நடைபெற்றுள்ளன. தவறுகளை ஒவ்வொருவரும் புரிந்துகொண்டால் தான் ஐக்கியமாக வாழலாம். முஸ்லிம் மக்கள் துரத்தப்பட்ட போது, அவர்களுக்காக குரல்கொடுத்தவர்கள் நாங்களே.

அவர்களுக்காக புத்தளத்தில் நகர் ஒன்றையும் உருவாக்கியிருந்தோம்’ எனவும் டக்ளஸ் மேலும் கூறினார்.

Related Posts