Ad Widget

முழு இலங்கையும் தமிழர் தாயகமே – சந்திரசேகரன்

santherasekaranவடக்கு, கிழக்கு மட்டுமல்ல தமிழர் தாயகம், முழு இலங்கையும் தமிழர் தாயகமே என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலையே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தென்னிலங்கையில் தற்போது தோற்றம் பெற்று வரும் இனவாதத்திற்கு உந்து சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ளது.

அதில் வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயக பூமி என கூறப்பட்டுள்ளது. இவ்வாறு இவர்கள் கூறினால் தென்னிலங்கை அடிப்படை இனவாதிகள் அங்குள்ள தமிழர்களை உங்கள் தாயக பூமியான வடக்கு கிழக்குக்கு செல்லுங்கள் என்று கூறமாட்டார்களா ?

இனவாதம் பேசி மக்களை சாக்கடைக்குள் தள்ளாமல் இனவாத அரசுக்கு எதிராக போராடுங்கள். மீண்டும் இனவாதம் தலைவிரித்தாட கூடிய சூழ் நிலை காணப்படுகின்றது. இனவாதத்தால் எதனையும் பெற்று கொள்ள முடியாது அதற்கு நாம் எதிரானவர்கள்.

யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்கள் ஆகியும் தேசிய இனப் பிரச்சனைக்கு இந்த அரசு ஏதாவது செய்திருக்கின்றதா?

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியோ மீள் குடியேற்றமோ பூரண ஜனநாயகமோ இன்னமும் வடக்கில் பூரணப்படுத்தப்படவில்லை இன்னமும் இராணுவ தலையீடுகள் இருக்கின்றன.

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மக்களுக்கு வசந்தம் வீசுகின்றதா ? இல்லை அதனை நடைமுறைப்படுத்தும் அமைச்சர்களுக்கு வசந்தம் வீசுகின்றதா ?

இன்னமும் 50,000க்கும் மேற்பட்டோர் குடிசைகளில் வாழ்கின்றனர். 80 வீதத்திற்கும் அதிகமானோர் கடனாளிகளாக வாழ்கின்றனர்.

2009 க்கு முன்னர் இங்கு பிரபாகரன் இருக்கின்றார். அங்கு குண்டு வெடிக்கின்றது. இங்கு கண்ணி வெடி இருக்கின்றது என்று கூறி அரசு தனது இருப்பை தக்க வைத்து கொண்டது.

இங்குள்ள பிரச்சனையை காரணம் காட்டியே அவர்கள் தெற்கில் வெற்றி பெற்றார்கள்.

அராஜகமாக சர்வாதிகாரமாக குடும்ப ஆட்சி முறை நடாத்தும் இந்த அரசாங்கத்தை நாம் எதிர்க்க வேண்டும். நாம் கேட்டு கொள்வது இந்த ஆட்சி முறைக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒன்றாக அணிதிரள வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

வடக்கில் நடைபெறவுள்ள தேர்தல் நீதியாக நடைபெறுமா என ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் கேட்ட போது,

ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி பீடம் ஏறிய பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களும் மக்களுக்கு ஏதிராக ஜனநாயகத்திற்கு எதிராக நடைபெற்ற தேர்தல்களே.

ஜனாதிபதி தேர்தல் கூட தான் ஜனாதிபதியாக இருந்து கொண்டு அனைத்து அதிகாரங்கள், அமைச்சர்கள், ஊடகங்கள் தனக்கு எதிரான ஊடகங்களை மிரட்டி என அனைத்தையும் தம் பக்கம் வைத்து கொண்டே இரண்டாம் முறை வெற்றி பெற்றார்.

எனவே நடைபெறவுள்ள வடக்கு தேர்தல் நீதியாக நடைபெறும் என்பது எம்மை பொறுத்த வரை கேள்விக்குறியே என பதிலளித்தார்.

Related Posts