Ad Widget

முழுநாட்டையும் நாங்கள் ஆளவிரும்பவில்லை தமிழீழத்தை ஆளவே விரும்புகின்றோம் – மாவை

முழுநாட்டையும் நாங்கள் ஆளவிரும்பவில்லை. தமிழீழத்தை ஆளவேண்டும் என்பதையே மக்கள் விரும்புகின்றார்கள்’ என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

mavai

நல்லூர் பிரதேச சபையில் நேற்று நடைபெற்ற வடமாகாண சபை உறுப்பினர்களிற்கான கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘மக்கள்தான் தலைவர்கள் நாங்கள் அவர்களின் தொண்டர்கள். இருக்கும் அதிகாரங்களைக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வை மேம்படுத்த முடியாதவாறு அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

13 வது திருத்தச்சட்டத்தில் எஞ்சியிருக்கின்ற அதிகாரங்களையும் திவிநெகும சட்டத்தின் மூலம் அரசாங்கம் தன்வசப்படுத்தியுள்ளது. இதற்காக நீதிமன்றம் சென்றபோது நீதிமன்றத்தில் திவிநெகும திருத்தம் தொடர்பில் எமக்கு சாதகமான தீர்ப்பு வழங்கிய சிராணி பண்டார நாயக்க பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இவ்வாறு அற்பசொற்ப சலுகைகள் கொண்ட மாகாண சபையைத் தான் நாங்கள் இன்று கொண்டிருக்கின்றோம். இதன் மூலம் ஜனநாயக வழியிலும் ஆயுதவழியும் பாதிக்கப்பட்டு கண்ணீருடன் வாழும் மக்களிற்கு ஒரு நல்வாழ்வை இந்த மாகாண சபை ஏற்படுத்த வேண்டும்.

தேர்தல் காலத்தில் மக்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் ஏற்றுக்கொண்டு எமது இனம் தமிழீழத்தில் வாழ விரும்புகின்றது என்பதையே வெளிக்காட்டி இருக்கின்றனர்.

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழினம் தோற்றுப்போன சமூகம் என்று எம்மைக் கருதியவர்களுக்கு இந்த தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளார்கள்.

அத்தோடு சர்வதேசத்தின் முன்பாக சிறிலங்கா அரசாங்கம் முன்வைத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் நாங்கள் ஜனநாயக முறையில் எங்களது, போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய நிலை ஏற்படும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts