Ad Widget

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அங்கீகரிக்கப்பட்ட தூபியாக அமைக்கத் தயாராக உள்ளேன்; பேரவைக் கூட்டத்தில் அனைத்தையும் வெளிப்படுத்துவேன்; துணைவேந்தர்

“மாணவர்களின் உணர்வுடன் இசைந்தே துணைவேந்தரும் பயணிக்கின்றார். அவ்வகையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை ஒரு அங்கீகரிக்கப்பட்ட நினைவுத் தூபியாக கட்டியெழுப்ப தயாராக உள்ளேன்” யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், மூத்த பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராசா தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைப்பது தொடர்பான மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்குவதாக துணைவேந்தர் உறுதியளித்துள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தமை தொடர்பில் கேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதுதொடர்பில் துணைவேந்தர், பேராசிரியர் சி.சிறீசற்குணராசா தெரிவித்ததாவது;

இணக்கப்பாடு என்று கூறுவதைவிட இசைந்து செயற்படவுள்ளதாகவே கூறினேன்.

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைக்க ஆரம்பப் புள்ளியாக இருந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க நான் தயாராகவே உள்ளேன். அதற்கு அனைவரது ஒத்துழைப்புகளையும் நான் எதிர்பார்க்கின்றேன்.

அதற்கான உரிய அனுமதிகளை பெற்றுக்கொள்ள பல்கலைக்கழக சமூகம் மட்டுமல்லாது தற்போது எழிச்சியுடன் நடைபெறுகின்ற போராட்டங்களில் ஈடுபடும் சமூக நலன்விரும்பிகள் மற்றும் அரசியல் வாதிகளும் தம்மாலான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவையின் அடுத்த கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பாகச் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையில் எல்லா விடயங்களும், மேலிடத்து உத்தரவுகள் உட்பட வெளிப்படுத்தப்படும் – என்றார்.

Related Posts