Ad Widget

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : முல்லைத்தீவு நீதிமன்றத்தின் தடை உத்தரவை மீளாய்வு செய்ய உத்தரவு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட உத்தரவை மீளாய்வு செய்யுமாறு வவுனியா மேல் நீதிமன்றம் பணித்துள்ளது.

அதன்படி வழக்கு கோவையை மீளாய்விற்கு வவுனியா மேல் நீதிமன்றிற்கு அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் வண.பிதா. எழில்ராஜன் அவர்களால் முள்ளிவாய்க்கால் கிழக்கு சின்னப்பர் தேவாலயத்திற்கு அருகாமையில் நடத்தப்படவிருந்த நினைவு தின நிகழ்வை தடை செய்து, மத நிகழ்வுகளை மட்டும் நடத்துவதற்கு அனுமதித்து முல்லைத்தீவு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது.

இறந்தவர்களின் பெயர்களை சிறிய கற்களில் பொறித்து அவற்றை ஓர் இடத்தில் சேர்த்து அதை ஒரு நினைவிடமாக ஆக்கும் முயற்சிக்கு எதிராகவே அத்தடை விதிக்கப்பட்டிருந்தது.

இத்தடை 14 நாட்களுக்கு ஒருமுறை நீடிக்கப்பட்டு வந்த நிலையில், வண.பிதா எழில்ராஜன் சார்பில் குறித்த தடையை மீளாய்வு செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி, மனுவை ஏற்றுக் கொண்ட வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி, வழக்கு கோவையை மீளாய்விற்காக வவுனியா மேல் நீதிமன்றிற்கு அனுப்புமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றை பணித்துள்ளார்.

Related Posts