Ad Widget

முள்ளிவாய்க்கால் தமிழ் மக்களுக்காக பிதிர்கடன் செலுத்தி நினைவுகூர அழைப்பு

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் வகையில், எதிர்வரும் 18 ஆம் திகதி பிதிர்கடன் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்ய்பபட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தி. துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கலை கலாசாரம் பண்பாட்டினை பேணும் முகமாக எதிர்வரும் 18 ஆம் திகதி காங்கேசன்துறை கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் காலை 6.00 மணிக்கு பிதிர்கடன் அதன் பின்னர் மகா யாகமும், ருத்ரா அபிஷேகமும், அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் மற்றும் இராணுவத்தினரின் உள்ளீடுகளின்றி எமது மக்களின் உறவுகளை நினைவுகூரும் வகையில், வட மாகாணத்தினைச் சேர்ந்த மக்களை வருகை தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எதிர்வரும் 18 ஆம் திகதி அதிகாலை 2.30 மணியளவில் வடமாகாணத்தின் 5 மாவட்டத்திற்குமாக போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சுமார் 1000 ற்கும் அதிகமான மக்களை எதிர்பார்ப்பதாகவும், எந்தவிதமான அச்சமின்றி பொது மக்களை தமது உறவுகளை நினைவுகூரும் வகையில், இந்த பிதிர்கடன் செலுத்தும் நிகழ்வில் பங்கு கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன், இந்த நிகழ்வில், எந்தவித அரசியல் தலையீடுகளின்றியும், இராணுவத்தினரை சீண்டிப்பார்க்கும் நோக்கத்துடனும் செய்யவில்லை என்றும், முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட எமது மக்களின் ஆத்மாக்கள் சாந்தியடைவதற்காக இந்த ஏற்பாட்டினை செய்துள்ளதாகவும், இந்த பிதிர்கடன் செலுத்துவதற்கு அனைத்து மக்களையும் ஒத்துழைத்து தமது உறவுகளுக்கு பிதிர்கடன் செலுத்தும் நிகழ்வில் பங்கு கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Posts