Ad Widget

முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த கால்பந்து சுற்றுப் போட்டி : அக்கினி சிறகுகளிடம் ரி.ஐ.டி விசாரணை?

அக்கினிச் சிறகுகள் அமைப்பைச் சேர்ந்த சிலரிடம், பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

”நொக் அவுட்” முறையிலான கால்பந்து சுற்றுப் போட்டியை, அக்கினிச் சிறகுகள் அமைப்பு, கிளிநொச்சியில் நடத்திவருகிறது. இதில், வடக்கு, கிழக்கிலுள்ள விளையாட்டு சங்கங்கள் பங்குபற்றுகின்றன. முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த தினத்தை அடிப்படையாக கொண்டே, இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மே18 ஆம் திகதி, முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த தினமாகும்.

அக்கினிச் சிறகுகள் அமைப்பின் தலைவர் செல்வநாயகம் ஆனந்தவர்மன், வவுனியா பயங்கரவாத விசாரணை பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்தச் சுற்றுப்போட்டிக்கு எவ்வாறு நிதி கிடைக்கின்றது. இதில், தமிழ் புலம் பெயர்ந்தோர் சம்பந்தப்பட்டுள்ளார்களா என அவரிடம் கேட்கப்பட்டுள்ளது. சுற்றுப்போட்டியில் ஞாபகார்த்த தீபம் ஏற்றப்படுமா எனவும் அவரிடம் கேட்கப்பட்டுள்ளது.

இதேபோல கிளிநொச்சி மாவட்ட கால்பந்து லீக் பொருளாளரிடம் தொலைபேசி மூலமாகக் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. வவுனியா ஜோசப் முகாமிலிருந்து பேசுவதாகக் கூறியே, இந்தக் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. புலம்பெயர்ந்தோர் சம்பந்தம் இல்லையெனத் தாம் கண்டால் சுற்றுப்போட்டியை நடத்த அனுமதிக்கப்படும் என பொருளாளரிடம் கூறப்பட்டதாக அறியமுடிகின்றது.

Related Posts