முல்லைத்தீவு மாவட்டப் பொது வைத்தியசாலையில் தற்போது முறையான ஆண் மற்றும் பெண் நோயாளர் விடுதிகள் இன்மையினால் கட்டில்கள் நிரம்பி வழியோரங்களில் பாய் விரித்து படுத்திருந்து நோயாளர்கள் மருத்துவம் பெறும் அவல நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த நோயாளர் விடுதிகளை அமைப்பது தொடர்பிலும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் இந்தியாவின் உதவியுடன் நான்கு மாடி நோயாளர் விடுதி வளாகத்தைக் கட்டவென தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவுடன் அதற்குரிய ஒப்பந்தமொன்று விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளதாகம் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ பதிலளித்துள்ளார்.
பாராளுமன்றில் செவ்வாய்க்கிழமை (23) வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இவ்வாறு கேள்வி எழுப்பியநிலையில் அமைச்சர் மேற்கண்டவாறு பதில் வழங்கியுள்ளார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கையில் உள்ள கஸ்ட மருத்துவமனைகள் பட்டியலில் உள்ள மாவட்ட பொது மருத்துவமனைகள், நான் வசிக்கும் வன்னியில் உள்ள மன்னார், முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைகளே.
எட்டு ஆண்டுகளாக நிரந்தர நோயாளர் விடுதிகளை எதிர்பார்த்துக்கொண்டே இருக்கின்றோம்.
கட்டில்கள் நிரம்பி, வழியோரங்களில் பாய் விரித்து படுத்திருந்து மருத்துவம் பெறும் அவல நிலையில் தொடர்ந்தும் இந்த மாவட்ட பொது மருத்துவமனையை வைத்திருப்பது அரசின் ஓரவஞ்சனையாகவே பார்க்க வேண்டியுள்ளது. ஏனைய மாவட்டங்களில் உள்ளதைப்போல , எங்களின் மாவட்டத்திற்கான நிரந்தர நோயாளர் மருத்துவவிடுதிகளுக்கு அதிமுன்னுரிமை கொடுத்து கட்டித்தாருவீர்களா எனக் கேள்வியெழுப்பினார்.
இந்நிலையில் இதற்கு சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ பதிலளிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையின் ஆண் மற்றும் பெண் விடுதிகள் தற்காலிக கட்டடங்கள் இரண்டில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவின் உதவியுடன் நான்கு மாடி மருத்துவ விடுதி வளாகத்தைக் கட்டவென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திட்டமுன்மொழிவை செயற்படுத்த தேவையான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் தொடர்புடைய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது. இந்திய உதவியுடன் மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவை நிருமாணிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாங்கள் கையெழுத்திட்டுள்ளோம். அடுத்ததாக இந்த முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையின் நான்குமாடி மருத்துவ விடுதிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம்.
அதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைக்கென முன்மொழியப்பட்ட நான்கு மாடி மருத்துவ விடுதி வளாகத்தை நிருமாணிப்பதற்கான உரிய மண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் உரிய அறிக்கை 2024.06.23 அன்று Soil and Mineral Engineering (Pvt) Ltd நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளது.
இந்த கட்டடங்கள் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே உள்ள புரிந்துணர்வின் மூலம் கட்டப்பட்ட இருப்பதால், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவேண்டும்.
இதற்காக வெளியுறவு அமைச்சின் ஒப்புதலையும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் திணைக்கள ரீதியான ஒப்புதலையும் பெறவேண்டும். மேலும் அமைச்சரவை ஒப்புதலையும் பெறவேண்டும்.
இந்த நடவடிக்கைகள் முடிந்த பிறகு, முறையான பெறுகை நடைமுறைகளைப் பின்பற்றி இந்த நடவடிக்கைகளைத் தொடங்கவுள்ளோம்.
நிச்சயமாக, அந்த மருத்துவமனைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஆனால் கடந்த காலத்தில் தொடங்கப்பட்டு நிறுத்தப்பட்ட பல திட்டங்கள் உள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்தத் திட்டங்களில் பதினேழு பணிகளை முடிக்க அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ளோம்.
மேலும் வரும் நாள்களில், நாற்பது பில்லியன் ரூபாய்கள் அல்லது 4500 கோடியை ஒதுக்குவோம். கூடுதலாக.
அவை நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் அவை 29 பில்லியனுடன் முடிக்கப்படவிருந்தன.
ஆனால் இப்போது நாங்கள் இரண்டு மடங்கு அதிகமாக செலவழித்து அந்தப்பணிகளை முடித்துள்ளோம்.
அதன்படி குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்துக்கு தேவையான விடுதி வளாகங்களைக் கட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். இலங்கை அரசின் நிதிக்கு கூடுதலாக, இந்திய அரசிடமிருந்தும் விசேட ஆதரவையும் பெறுவோம் – என்றார்.