Ad Widget

முல்லைத்தீவு , மட்டக்களப்பு பிரதேசங்களில் வறுமையை ஒழிப்பதற்கான திட்டம்

அநுராதபுரம் பொலநறுவை மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு 2016ம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட வறுமையை ஒழிப்பதற்கான திட்டம் இவ்வருடத்தில் முல்லைத்தீவு மட்டக்களப்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கஜந்த கருணாதிலக இந்த விடயத்தை தெரிவித்தார்.

இது தொடர்பாக அமைச்சர் கஜந்த கருணாதிலக மேலும் தெரிவிக்கையில் ,

கிராம மட்டத்திலான அடிப்படை வசதிகள் வாழ்வாதார மேம்பாட்டுக்கான வேலைத்திட்டம் மட்டக்களப்பு அனுராதபுரம் பொலநறுவை ஆகிய மாவட்டங்களுக்கு மேலதிகமாக முல்லைத்தீவு, காலி, மொனராகலை, இரத்தினபுரி, களுத்துறை, புத்தளம் மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

2016ம் ஆண்டில் இந்த மாவட்டங்களை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட அடிப்படை வசதிகளுக்கான 241 திட்டங்களும் வாழ்வாதார மேம்பாட்டுக்கான 145 திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது.

வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்ட இந்த திட்டத்திற்கு அமைவாக வறுமை குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளது.

இதனடிப்படையில் நாடுதளுவிய ரீதியில் ஏனைய மாவட்டங்களிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்துவதென அடையாளங்காணப்பட்டுள்ளது.

இதற்கமைவாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் கிராம வீதி அபிவிருத்தி சிறிய அளவிலான நீர்ப்பாசனங்களை நவீன மயப்படுத்துதல் குடிநீர்த்திட்டம் சிறிய பாலங்கள் மதகுகள் ஆகியவற்றை அடையாளம்கண்டு பொதுவசதிகளுக்கான அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இதேபோன்று இளைஞர் யுவதிகளுக்கு சுயதொழில் வாய்ப்பிற்கான திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கடற்றொழில் ,கால்நடை ,உற்பத்திக்கான திட்டங்களும் மேற்கொள்ளப்படவுள்ளது.

கிராமிய பொருளாதாரம் தொடர்பான அமைச்சின் கண்காணிப்பின்கீழ் மாவட்ட செயலாளர்கள் பிரதேச செயலாளர்கள் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதற்கு தேவையான நிதியுதவியை பெற்றுக்கொள்வதற்காக கிராமிய பொருளாதாரம் தொடர்பான அமைச்சர் பி.ஹெரிசன் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Posts